சட்டவிரோத மண் கடத்தல்; தடுக்க கண்காணிப்பு குழு அமைத்து உத்தரவு

அன்னுார் : சட்டவிரோத கனிமவள கடத்தலை தடுக்க, 29 கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, தாசில்தார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலுார், பொகலுார் உள்ளிட்ட சில ஊராட்சிகளில் சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது.

இதை தடுக்க கிராம கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து தாசில்தார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அன்னுார் தாசில்தார் யமுனா பிறப்பித்துள்ள உத்தரவு : அன்னுார் தாலுகா பகுதியில், சட்டவிரோத மண் கடத்தலை தடுக்கவும், கண்காணிக்கவும், கிராம அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது. தினமும், இரவு 8:00 மணி முதல், மறுநாள் காலை 6:00 மணி வரை, அன்னுார் தாலுகா பகுதியில் வாகன சோதனை நடத்தவும், ஆய்வு செய்யவும் உத்தரவிடப்படுகிறது.

கண்காணிப்பு பணியில் தவறாமல் ஆஜராகி, இரவு நேர ரோந்து பணியில் மேற்கொள்ளும் பணி விவரங்கள், வாகன சோதனையில் கைப்பற்றப்படும் வாகனங்கள், தணிக்கை செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட விபரங்களை தினமும் சமர்ப்பிக்க வேண்டும். இரவு ரோந்து முடிந்து செல்லும்போது கையொப்பமிட்டு செல்ல வேண்டும். கிராமங்களில் கனரக வாகனங்களை பயன்படுத்தி நடைபெறும் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.

கனிமம் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர், சிறப்பு வருவாய் ஆய்வாளர், நில அளவையர் ஆகியோர் கண்காணிப்பு குழுவில் இணைந்தும், நேரடியாக தணிக்கை மேற்கொண்டும், தாலுகா அலுவலகத்திற்கு விவரம் அனுப்ப வேண்டும். தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னுார், இடிகரை, எஸ்.எஸ்.குளம் பேரூராட்சிகள் மற்றும் 26 ஊராட்சிகளில் மொத்தம் 29 கிராம கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குழுக்களில் வருவாய், காவல், நீர் வளத்துறை மற்றும் வனத்துறையில் தலா ஒருவர் மற்றும் தன்னார்வலர்கள் இருவர் என ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement