பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழிக்கு வாய்ப்பு; காங்., பரிந்துரை நிராகரிப்பு

புதுடில்லி: பயங்கரவாத்தை ஆதரித்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் நிலையை உலகிற்கு எடுத்து சொல்ல பிரதமர் மோடி, எம்.பிக்கள் கொண்ட குழுவை அமைக்க உள்ளார். இந்தக்குழுவிற்கு காங்கிரசை சேர்ந்த எம்.பி., சசிதரூருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல அரசியல் கட்சியின் எம்பிக்கள் இடம்பெற உள்ளனர். இதில் தமிழகத்தில் திமுகவை சேர்ந்த கனிமொழி எம்.பி.,க்கும் இடம் தரப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை சர்வதேச அளவில் அம்பலப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. அரசியல் பாரபட்சம் இன்றி அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
சசி தரூர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வேறு சில நாடுகளுக்குச் சென்று பாகிஸ்தானின் சதித்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே ஒரு கருத்தை உருவாக்குவார் என்று கூறப்படுகிறது.
குழுவின் மற்ற உறுப்பினர்கள் உலகின் பிற நாடுகளுக்குச் சென்று பாகிஸ்தானின் பயங்கரவாத நிலையை அம்பலப்படுத்துவார்கள்.
எடுத்து வைக்கப்படும் கருத்துக்கள்
01. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது என்பதை எடுத்து கூறுவர். ஐ.நா மற்றும் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
02. பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனிரின் குழுவில் ஒசாமா பின்லேடனின் கூட்டாளியின் மகன் இடம்பெற்றுள்ளார், இது பயங்கரவாதிகளுடனான இஸ்லாமாபாத்தின் உறவை எளிதில் விளக்குகிறது.
03. காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் மதம் குறித்து கேட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் இந்து சுற்றுலாப் பயணிகள். இந்த விவரம் எடுத்து வைக்கப்படும். பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீரில் நடந்த கொடூரமான சம்பவத்தை விளக்குவர்.
7 மண்டலங்களாக பிரிப்பு
01. அமெரிக்கா, 02, ஐரோப்பிய ஒன்றியம், 03. தென்கிழக்கு ஆசியா, 04. மத்திய கிழக்கு நாடுகள், 05. ஆப்பிரிக்கா, 06. ஆஸ்திரேலியா, 07. பிரிட்டன் என பிரிக்கப்பட்டுள்ளன.
40 எம்பி.,க்கள் கொண்ட 7 முதல் 8 குழுக்களாக செயல்படுவர். 10 நாடுகளுக்கு இந்த குழு சென்று பாகிஸ்தானின் முகத்திரையை அம்பலப்படுத்தும். மே 23க்குள் இந்த குழு வெளிநாடுகளுக்கு கிளம்பி செல்லும்.
இந்தக்குழு தொடர்பாக அரசு தரப்பில் ஏறக்குறைய எம்பி.,க்கள் பட்டியல் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, காங்கிரஸ் பொது செயலர் ஜெயராம் ரமேஷிடம் பேசி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மணீஷ்திவாரி, சல்மான்குர்ஷீத், அமர்சிங், அணுராக்தாக்கூர், கனிமொழி, ரவிசங்கர் பிரசாத், சமிக் பட்டாச்சார்யா, புரந்தேஸ்வரி, எஸ்.எஸ். அலுவாலியா, ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஓவைசி, சுப்ரியா சுலே, அபரஜித்தா சாரங்கி, மற்றும் பல எம்,பிக்கள் இடம்பெறுவர்.
காங்கிரஸ் கேட்டது யாருக்கு ?
இதற்கிடையில் மத்திய அரசு தயாரித்து வரும் வெளிநாடு செல்லும் குழுவிற்கு எம்பிக்கள் பட்டியலில் காங்கிரஸ் தரப்பில் 4 பேர் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. காங்., பொதுசெயலர் ஜெய்ராம்ரமேஷ் அனுப்பிய பரிந்துரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, லோக்சபா காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய், ராஜ்யசபா எம்பி., சையீது நாசர் உசேன், லோக்சபா எம்பி., ராஜாபிரார் ஆகிய 4 பேர் பெயர்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதில் பட்டியலில் இல்லாத சசிதரூர் தேர்வு செய்யப்பட்டார்.
7 குழுக்கள் தலைவர்கள் யார் ?
பார்லி., விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண்ரிஜ்ஜூ வெளியிட்டுள்ள பதிவில்; 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவிற்கான 7 தலைவர்கள் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.
இதன்படி : சசிதரூர் (காங்கிரஸ்) , ரவிசங்கர் பிரசாத் (பா.ஜ.,), சஞ்சய்குமார் ( ஐக்கிய ஜனதாதளம்), பைஜெயந்த் பண்டா (பா.ஜ., ), கனிமொழி ( தி.மு.க.,), சுப்ரியா சுலே (தேசிய வாத காங்கிரஸ்) , ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ( சிவசேனா) . இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மிகவும் முக்கியமான தருணங்களில், பாரதம் ஒற்றுமையாக நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்ற நமது செய்தியை எடுத்துச் செல்லும் ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் விரைவில் முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்ல உள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்ட, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு இது . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












மேலும்
-
டில்லியில் கலகலக்கிறது ஆம் ஆத்மி; புதிய கட்சி தொடங்கிய அதிருப்தியாளர்கள்
-
நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு: குஜராத் அமைச்சர் மகன் கைது!
-
சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 13 பேர் கோவையில் கைது; உ.பி.,யில் 90 பேர் சிக்கினர்!
-
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை; சென்னை உயர்நீதிமன்றம்
-
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாக மோசடி: ரூ.79 லட்சத்தை இழந்த பெண்
-
உக்ரைனில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; பஸ்சில் பயணித்த 9 பேர் பலி!