கோத்தகிரியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடப்பாண்டு, அக்னி வெயிலின் தாக்கம் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கத்திற்கு மாறாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தேயிலை தோட்டங்களில் தாக்கப்பட்ட சிவப்பு சிலந்தி நோயின் தாக்கம், படிப்படியாக குறைந்து வருகிறது. பசுந்தேயிலை மகசூல் உயர்ந்து வருகிறது. தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து வருகிறது.

இதனால், எதிர்வரும் நாட்களில், மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோத்தகிரி பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கும் ஈளாடா மற்றும் அளக்கரை நீர்நிலைகளில், தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், இனிவரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை என்பதால், மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement