தினமலர் செய்தியால் கிடைத்தது தரைப் பாலம்

திருநகர் : திருநகர் ஏழாவது பஸ் ஸ்டாப்பிலிருந்து பாலசுப்ரமணியன் நகருக்கு செல்லும் வழியில் திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர், மழைநீர் செல்லும் நிலையூர் கால்வாய் மேல் தரைப்பாலம் இருந்தது. திருநகரில் இருந்து பாலசுப்ரமணியன் நகர், பாலாஜிநகர், ஹார்விபட்டிக்கு செல்வோர், வருவோர் இந்த இணைப்பு பாலத்தை பயன்படுத்தினர். ஏராளமான பள்ளி வாகனங்கள். மணல் லாரிகள் இந்த வழியாகத்தான் செல்கின்றன.

பல ஆண்டுகளாக அந்த பாலத்தின் ஒரு முனையில் பெரிய ஓட்டை விழுவதும் சிமென்ட் மூலம் அடைக்கப்படுவதும் தொடர்ந்து நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பாலத்தில் இருந்த பள்ளத்தில் சரக்கு லாரி அந்த பள்ளத்தில் சிக்கி பெரியதாகியது.

முற்றிலும் சேதம் அடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, அந்த தரைப்பாலம் அகற்றப்பட்டு ரூ. 15 லட்சத்தில் புதிய தரை பாலம் கட்டும் பணி நேற்று துவங்கியது. நடந்து செல்வோருக்காக அருகில் உள்ள தெருவின் வழியாக கால்வாய் மேல் தற்காலிக நடைபாதை அமைக்க நடவடிக்கை தேவை.

Advertisement