'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?

எதிரி நாட்டு ஒற்றன் போர் அறிவிக்கும் ஓலையோடு வரும்போதும்கூட, அவனை உபசரித்து பாதுகாப்பாக வழியனுப்பிய பாரம்பரியம் நம்முடையது. ஆனால் இன்றோ விருந்தினரை சுமையாகப் பார்க்கும் நிலைதான் பரவலாக உள்ளது. விருந்தினரை உபசரிப்பது பற்றி சத்குருவின் வார்த்தைகள்…
கேள்வி:'அதிதி தேவோ பவ' ஏன் இப்படி சொல்றாங்க... விருந்தாளியா வர்றவங்க அவ்வளவு முக்கியமானவங்களா?
சத்குரு:
உங்கள் வீடு என்னும் எல்லை உங்கள் கன்ட்ரோலில் இருக்கிறது. அதற்குள் ஒருவர் வரும்போது, அங்கே பிரதானமானவர் யார்? நீங்கள்தானே? உங்கள் எல்லைக்குள் விருந்தினராக நுழையும் ஒரு மனிதர் சற்று அசௌகர்யமாக இருப்பதை நீங்கள் கண்டிருக்க முடியும். இப்படி நம்மைத் தேடி வரும் மனிதரை அசௌகர்யமாக உணரச் செய்வதை அவமானமாக இந்தக் கலாச்சாரத்தில் பார்த்தனர்.
“ஏதோ ஒரு சூழ்நிலையில், நீங்கள் இன்னொருவருடன் இருக்கும்போது, அசௌகர்யமாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்த சூழ்நிலையில் அந்த அசௌகர்யத்தை நீங்கள் அனுபவியுங்கள், இன்னொருவருக்கு எப்போதுமே கொடுக்க வேண்டாம்,” என்கிறார் மகாத்மா காந்தி. ஏனென்றால், ஒரு மனிதன் அசௌகர்யமாக இருப்பது அவருக்குள் ஒருவிதமான பாதிப்பை உண்டு பண்ணும். அதிலும் குறிப்பாக நம்மிடத்திற்கு வருபவரை, வணங்குகிற தன்மையில் பார்க்காவிட்டால் அவருக்குள் இந்த அசௌகர்ய உணர்வு குடிபுகுந்துவிடும்.
வீட்டிற்கு வந்த விருந்தாளியை நண்பராகப் பாவித்தால்கூட ஏதோ ஒரளவிற்குத்தான் அவரால் உங்களுடைய இல்லத்தில் சுகமாக உணர முடியும். அதனால்தான் வரும் விருந்தாளியை தெய்வத்தைப்போல் உபசரித்தனர். அவருக்கு அசௌகர்ய உணர்வே ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டனர். “ஐயோ, நான் இருப்பது அடுத்தவர் வீடு, பார்த்து உட்கார வேண்டும், முறையாக சாப்பிட வேண்டும்,” என்ற பயத்தினால் அவர்கள் செயல்படக் கூடாது என்று அக்கறைக் கொண்டனர்.
ஆனால் உபசரிப்பாளரான உங்களுக்கு இன்னொரு விதமான பயம் கவ்விக் கொள்கிறது. “ஒருவேளை நான் அவர்களை தெய்வமாக பார்த்தால், அவர்கள் இங்கேயே தங்கி விட்டால் என்ன செய்வது,” என்பதுதான் அது. ஆனால் இப்படியொரு மனோநிலையில் நம் முன்னோர் விருந்தோம்பலை அணுகவில்லை. இந்த கலாச்சாரத்தில், அதிதி மட்டுமல்ல, தாயானாலும் தந்தையானாலும், ரோட்டில் பார்க்கும் தெரியாத ஒரு மனிதரானாலும் பார்த்தவுடன் கைகூப்பிக் கும்பிடும் வழக்கம் காலம் காலமாக நிலவி வருகிறது.
ஒருவர் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் சரி, அவரைப் பார்த்தவுடன் அவரை பற்றின பலவிதமான முடிவுகள் நம் மனதில் நிழலாடத் துவங்கும். அவருடைய மனோநிலையை உணரத் துவங்கினால் நம்முள் பலவிதமான உணர்வுகள் ஏற்படலாம். அவர் வாழ்ந்த வாழ்க்கையை கவனித்தால், அவரைப் பற்றிய தீர்க்கமான பல முடிவுகளை நாம் எடுக்க நேரிடலாம். அதனால் ஒரு மனிதரைப் பார்க்கும்போது அவரது உடல், மனம் மற்றும் வாழ்க்கை சூழ்நிலையைக் கொண்டு முடிவுகள் செய்து கொள்ளாமல் அவருக்குள் இருக்கும் மனிதத்தைப் பார்த்து வணங்குவதே நம் தேசத்தில் வழக்கமாக இருந்தது. இந்த மனித உடலை உருவாக்கிய அந்தப் படைத்தலுக்கு அடிப்படையான சக்தியும் அவனுக்குள் அல்லவா இருக்கிறது? அதைத்தானே நீங்கள் கடவுள் என்று அழைக்கிறீர்கள்?
படைத்தலுக்கு அடிப்படையான சக்தி மனிதனுக்குள் இருக்கும்போது அவனைக் கும்பிட வேண்டாமா? நம் வீட்டுக்குள்ளே வரும் தெய்வீகத்தை வணங்காமல் இருப்பது எப்படி? அதைத்தான் “அதிதி தேவோ பவ” என்றார்கள்.
ஆனால் அதிதி மட்டும் தேவோ பவ அல்ல, அனைத்து உயிர்களும், மலைகளும், நீரோடைகளும், மரங்களும், செடிகளும், கடலும் என அனைத்தும் வணங்க வேண்டியவைதான். இந்த கலாச்சாரத்தில், நமக்குள் இந்த எண்ணத்தை விதைத்ததே படைத்தலுக்கும் படைத்தவனுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்பதை உணர்த்தத்தான்.
படைத்தல் நிறைந்திருக்கும் இடத்திலெல்லாம், படைத்தவனுடைய அடிச்சுவடு பதிந்துள்ளது. அதனை நாம் காணும் போதெல்லாம் கும்பிட வேண்டாமா? நம் வீட்டிற்கு வரும் அதிதியும் (விருந்தினரும்) படைத்தல் தானே? அதனால் தான் “அதிதி தேவோ பவ.”
நம்முடன் வாழும் சக மனிதரை தெய்வத்தைப் போல் பாவிக்கத் துவங்கினால் நம்முள்ளும் தெய்வீகம் குடிகொள்ளாமல் போய்விடுமா என்ன?
மேலும்
-
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
-
அரசு பஸ் டயர் கழன்று ஓடியது: பயணிகள் 56 பேர் தப்பினர்!
-
அரசு டாக்டர் பணி நீக்கம்; ரூ 40 லட்சம் அபராதமும் விதித்தது மனித உரிமைகள் ஆணையம்!
-
பொற்கோவிலை பாக். தாக்குதலில் இருந்து காத்தது எப்படி; மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம்
-
மத்திய பிரதேச அமைச்சரின் மன்னிப்பை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்; சிறப்பு குழு அமைத்து உத்தரவு
-
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்!