மத மாற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யுங்க: பா.ஜ., பொதுச்செயலாளர்

1

பொள்ளாச்சி : ''பொள்ளாச்சியில் பள்ளி சிறுமிகளை மத மாற்ற முயற்சித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாவிட்டால் போராட்டம் தொடரும்,'' என பா.ஜ., மாநில பொது செயலாளர் முருகானந்தம் கூறினார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அரசு பள்ளிக்கு சென்ற மாணவியை, மதமாற்றம் செய்ய முயன்றவர்களை, போலீசார் கைது செய்ய கோரி, தமிழக பா.ஜ., மாநில பொது செயலாளர் முருகானந்தம் தலைமையில், 50க்கும் மேற்பட்ட பா.ஜ., வினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

அங்கு, மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சியில் குழந்தைகள் மத மாற்றம் குறித்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

பள்ளிச்சிறுமிகளை ஜெபக்கூடத்திற்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மர்ம பொடி கலந்து கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே, பொள்ளாச்சி பகுதியில் பாலியல் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சிறுமிகளை அழைத்துச் சென்றதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில், உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால், பா.ஜ., வினர் போராட்டத்தில் ஈடுபடுவர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்ந்து பா.ஜ., வினர், பொள்ளாச்சி -- உடுமலை தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை அருகில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த பொள்ளாச்சி ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங், பா.ஜ., வினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, பா.ஜ.,வினர் கலைந்து சென்றனர்.

Advertisement