திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு 100 கிலோ வெள்ளி விளக்கு காணிக்கை

பெங்களூரு : திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு, மைசூரு அரச குடும்பத்தின் பிரமோதா தேவி, 100 கிலோ கொண்ட வெள்ளி விளக்குகள் காணிக்கையாக வழங்கினார்.

மைசூரு அரச குடும்பத்தின் ராணி பிரமோதா தேவி, அவரது மகனும், பா.ஜ., - எம்.பி.யுமான யதுவீர் நேற்று திருமலை சென்று, ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அரச குடும்பத்தின் சார்பில், 100 கிலோ எடையுள்ள இரண்டு பெரிய வெள்ளி விளக்குகள், காணிக்கையாக வழங்கப்பட்டன.

திருப்பதியின் ரங்கநாயக்குலா மண்டபத்தில், நடந்த நிகழ்ச்சியில் வெள்ளி விளக்குகளை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். நிர்வாகம் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக கமிட்டி தலைவர் பி.ஆர்.நாயுடு, விளக்குகளை பெற்று கொண்டார்.

இரண்டு விளக்குகளும், கோவில் மூலஸ்தானத்தில் இரவு, பகலாக எரியும். பிரமோதா தேவியின் இந்த காணிக்கை, 300 ஆண்டுகள் பழமையான சம்பிரதாயத்தை, மீண்டும் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 18ம் நுாற்றாண்டில் அன்றைய மைசூரு மன்னர், திருமலை கோவிலுக்கு இது போன்ற வெள்ளி விளக்குகளை காணிக்கையாக செலுத்தி உள்ளார்.

கோவில் அதிகாரிகள் கூறியதாவது: மைசூரு அரச குடும்பத்தின் பிரமோதா தேவி, கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை வளர்க்கிறார். மைசூரு அரச வம்சம் வகுத்த சம்பிரதாயங்களை பாதுகாக்கிறார். தற்போது அவர் அளித்த காணிக்கையை, பக்தர்கள் பாராட்டுகின்றனர்.

இது போன்ற, அதிகம் மதிப்புள்ள காணிக்கைகள் மிகவும் அபூர்வமானவை. வரலாற்றின் அடையாளம். இந்த அகண்ட விளக்குகள் வெள்ளியால் செய்தவை மட்டுமல்ல, நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன.

இவ்வாறு கூறினர்.

Advertisement