கோடை மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

வெண்ணந்துார், வெண்ணந்துார் பகுதியில் தொடர் கோடை மழையால், செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில், 50-க்கும்
மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தற்போது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. வெண்ணந்துார் பகுதிகளிலும் சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் செங்கல் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக செங்கல் உற்பத்திக்கு தேவைப்படும் மண் நனைந்து, அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மண் கொண்டு செங்கல் அறுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
மேலும், காய வைத்திருக்கும் செங்கல், மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மழைக்கு முன் அறுக்கப்பட்ட செங்கற்கள் சூளையில் வேக வைக்க முடியாமல், கொட்டகை அமைத்து பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கோடை மழையால், பெரும்பாலான இடங்களில் கட்டடப்பணி நடக்காமல் உள்ளது. ஏற்கனவே சூளையில் வேக வைக்கப்பட்ட கற்கள் விற்பனையாகாமல் உள்ளதால், சூளை வைத்திருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சூளை உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement