மருமகனுக்கு மீண்டும் பதவி கொடுத்த மாயாவதி

புதுடில்லி : பகுஜன் சமாஜில் மீண்டும் இணைக்கப்பட்ட தன் சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை, தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளராக அக்கட்சி தலைவர் மாயாவதி நியமித்துஉள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வரான மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார்.

இவரது சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த் என்பவரை, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மாயாவதி அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, ஆகாஷ் ஆனந்தின் பதவியை பறித்த மாயாவதி, ஜூலையில் மீண்டும் பதவியை கொடுத்தார்.

அப்போது, ஆகாஷ் ஆனந்தை தன் அரசியல் வாரிசாகவும் அறிவித்தார். இந்நிலையில், கடந்த மார்ச்சில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆகாஷ் ஆனந்தை, மாயாவதி நீக்கினார்.

இதைத்தொடர்ந்து ஆகாஷ் ஆனந்த், மாயாவதியிடம் பல முறை மன்னிப்பு கேட்டார். இதையடுத்து ஆகாஷை, பகுஜன் சமாஜில் கடந்த மாதம் மீண்டும் இணைத்தார்.

இதற்கிடையே, அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கி, ஆகாஷ் ஆனந்தை மாயாவதி நியமித்தார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஆகாஷ் ஆனந்த் கூறுகையில், 'என் தவறு களை மன்னித்து, மீண்டும் எனக்கு கட்சியில் பணியாற்ற வாய்ப்பளித்த தலைவர் மாயாவதிக்கு நன்றி' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement