கட்டாய மதமாற்றத்தை அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை: அலகாபாத் ஐகோர்ட்

6

பிரயாக்ராஜ்: ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்ற, இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதித்தாலும், கட்டாய மதமாற்றத்தையோ, மோசடியான மதமாற்றங்களையோ அது ஏற்கவில்லை என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உ.பி.,யில், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கடந்த 2021ல் அமல்படுத்தப்பட்டது.

அங்குள்ள சிலரை பணத்தாசை காட்டியும், இலவச மருத்துவ வசதி வழங்குவதாக கூறியும் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியதாக நால்வர் மீது, இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தள்ளுபடி



இதையடுத்து, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி நால்வரும் வழக்கு தொடர்ந்தனர். கட்டாய மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிராகவும் மனுவில் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், நால்வர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தது.

நால்வரின் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும், போலீஸ் விசாரணைக்கு ஏற்றவை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் திவாகர் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் கூறியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 25ன் கீழ், ஒவ்வொருவரும் பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரத்துக்கு உட்பட்டு தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும், பிரசாரம் செய்யவும் அடிப்படை உரிமை உண்டு.

இதில், 'சுதந்திரமாக' என்பது மத நம்பிக்கையின் தன்னார்வ தன்மை. அதாவது, அரசியலமைப்பு சட்டமானது, கட்டாய மதமாற்றம் மற்றும் மோசடி மதமாற்றங்களை அங்கீகரிக்கவில்லை; மத பிரசாரம் என்ற போர்வையில் நடைபெறும் ஏமாற்று நடைமுறைகளுக்கு அது பாதுகாப்பு வழங்கவில்லை.

ஒரு மதம் மற்றொன்றை விட உயர்ந்தது என்பது, மதச்சார்பின்மை கருத்துக்கு எதிரானது. இந்திய மதச்சார்பின்மை என்பது, அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை என்ற கொள்கையில் வேரூன்றிஉள்ளது.

ஏற்புடையதல்ல



பலவந்தம், மோசடியான வழிமுறைகள், செல்வாக்கு உள்ளிட்டவை வாயிலாக மதமாற்றம் செய்வது மற்றும் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு ஒருவரை மாற்றுவதற்காகவே திருமணம் செய்வது போன்ற வற்றை தடுப்பதே,கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் நோக்கம்.

இதன் வாயிலாக சமூக நல்லிணக்கத்தில் ஏற்படும் சீர்குலைவுகளை தடுக்க, இந்த சட்டம் முயற்சிக்கிறது.

உ.பி., கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் - 2021ன் கீழ், பாதிக்கப்பட்டவர் அல்லது நெருங்கிய உறவினர் மட்டுமே புகார் அளிக்க முடியும் என்ற வாதம் ஏற்புடையதல்ல.

கைது செய்யும் வகையிலான குற்றங்களில், போலீஸ் அதிகாரியும், தாமாகவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.


இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement