குமுளி மலைப் பாதையில் அதிவேகமாக செல்லும் ஜீப்புகளால் விபத்து அபாயம்! அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அச்சத்தில் மக்கள்

கூடலுார் : ஏலத்தோட்ட வேலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் குமுளி மலைப்பாதையில் அதிவேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் குமுளி மலைப் பாதையும் ஒன்றாகும். லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். வழி விடும் முருகன் கோயில் வளைவு, கொண்டை ஊசி வளைவு, மாதா கோயில் வளைவு, இரைச்சல் பாலம் வளைவு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும். கோடை விடுமுறையால் கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வாகனங்களும் இவ்வழியாக அதிகம் செல்கின்றன.

இடுக்கி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் ஏலத்தோட்டம் உள்ளது. இதில் அதிகமாக தமிழகப் பகுதியில் உள்ள கூடலுார், கம்பம், போடி, காமையகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாகும். தினம்தோறும் ஏலத்தோட்டப் பணிகளுக்காக நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் குமுளி மலைப் பாதை, கம்பம் மெட்டு மலைப்பாதை, போடி மெட்டு மலைப்பாதைகளில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்று பணி முடிந்த பின் மாலையில் திரும்பி வருவது வழக்கம். இவ்வாறு சென்று திரும்பும் ஜீப்புகள் காலை, மாலையில் குமுளி மலைப்பாதையில் அதிவேகமாக செல்கின்றன.

எதிரேவரும் வாகனங்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. டூ வீலரில் செல்பவர்கள் உயிரை கையில் பிடித்து செல்கின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. பெயரளவிற்கு அவ்வப்போது போலீசாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் சிறியதாக அபராதம் விதித்து தொடர்ந்து கண்காணிப்பதில்லை. தற்போது சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிவேக ஜீப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் கூறுகையில், 'ஏலத்தொட்ட வேலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகளில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த கட்டாயமாக்க வேண்டும்.

வேகமாக செல்லும் ஜீப்புகளை கண்காணித்து கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும். மேலும் ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இது போன்ற அதிரடி நடவடிக்கை தொடர்ந்து எடுத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

Advertisement