தி.மு.க., பிரமுகர் மீதான பாலியல் புகார்; விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!

16


சென்னை: அரக்கோணத்தில் திருமணம் செய்து ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்ததாக கல்லுாரி மாணவி குற்றச்சாட்டி உள்ளார். தி.மு.க., பிரமுகர் தெய்வச்செயல் மீதான வழக்கை, தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரை சேர்ந்த தெய்வசெயல்,40, தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாக நாடகமாடி, கடந்த ஜன., 31ல், 2வதாக திருமணம் செய்து கொண்டார். அவர் தன்னை 2 மாதமாக அடித்து துன்புறுத்தி, தி.மு.க., பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்ததாகக் கூறிய அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து கண்டன அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து மத்திய ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (மே 21) தேசிய மகளிர் ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தி.மு.க., பிரமுகர் மீது கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இதில் அவர் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் வற்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் அடங்கும்.


குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை கருத்தில் கொண்டு தமிழக டி.ஜி.பி.,க்கு உடனடியான, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளோம். பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எந்தவொரு அரசியல் தலையீட்டையும் தடுப்பது குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.



மூன்று நாட்களுக்குள் எப்.ஐ.ஆர்., நகலுடன் விரிவான நடவடிக்கை அறிக்கையையும் கோரியுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement