மத்திய அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு

புதுச்சேரி : டில்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

சந்திப்பின்போது, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டபோது இருந்த பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் பல்வேறு புதிய தொழில் நுட்பக் கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது.

புதுச்சேரி மாநில மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கி சேர்க்கை வழங்க வேண்டும் என, கோரிக்கை கடிதம் வழங்கினார்.

அப்போது மத்திய அமைச்சர், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement