தடை செய்யப்பட்ட பாலிதீன் உபயோகம் எங்கும் தாராளம்: போயே போச்சு அரசின் மஞ்சப்பை திட்டம்

பாலிதீன் ரகப் பொருட்கள் எளிதில் மக்குவதில்லை. நிலத்தடி நீராதாரம் பாதித்து சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து கேடு விளைவித்து வருகிறது. பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அரசு அமல்படுத்தி உள்ளது.

2019 ஜன. 1 முதல் அமலுக்கு வந்தபோதும் இதனை முழுமையாக செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி, பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் நகராட்சிகள், 23 பேரூராட்சிகளில், இவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை போதுமான அளவில் இல்லை.

மளிகை, ஓட்டல், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பொருட்களின் உபயோகம் தாராளமாகிவிட்டது.

நகர் மட்டுமின்றி குக்கிராம பெட்டிக்கடைகளில் விற்பனையாகும் தின்பண்டம், சோப், ஷாம்பு போன்ற பொருட்களின் விற்பனை மூலம் தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு தவிர்க்க முடியாத வகையில் திணிக்கப்பட்டு உள்ளது.

பாலிதீன் உபயோகம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு, தனியார் தொண்டு அமைப்புகளின் செயல்பாடு பெயரளவில் மட்டுமே உள்ளது.

இவை தவிர பாலிதீன் கழிவுகள் உரிய முறையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தப்படுவது இல்லை. தெருக்கள், மயானம், நீரோடைகள், கண்மாய் உள்ளிட்ட நீராதாரங்கள் என கண்ட இடங்களில் இவை குவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களும் தீயிட்டு எரிக்கின்றனர்.

இப்பிரச்னையால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அடர் புகை மண்டலம் சூழ்ந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்போர், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் சுவாசத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.

பாலிதீனுக்கு மாற்றாக அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து மஞ்சப்பை திட்டம் துவங்கிய வேகத்திலேமுடங்கி கிடக்கிறது.

பாலிதீன் தவிர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஞ்சப்பை பயன்பாட்டை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

இதற்கேற்ப நடவடிக்கைகளை முடுக்கி விடும் வகையிலான உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்க வேண்டியது அவசியம்.-

அலட்சியம் தவிர்க்கணும்

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் உட்பட பொது இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திர செயல்பாட்டில் குளறுபடி உள்ளது. முதல் முறை 10 ரூபாய் நாணயம் செலுத்தும்போது பை வெளிவருவதில்லை. 2வதாக நாணயம் செலுத்தினால் மட்டுமே துணிப்பை வருகிறது. இதன் கைப்பிடி பகுதி பாலிதீன் பகுதிகளை கொண்டுள்ளது. பாலிதீன் ஒழிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. நகர் மட்டுமின்றி குக்கிராமங்களிலும் பாலிதீன் பயன்பாடு தாராளமாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மையை ஏட்டளவில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்துகின்றன. பாலிதீன், மருத்துவ, தனியார் தொழிற்சாலை கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். பலரை சுவாச நோயாளிகளாக மாற்றிய பெருமை உள்ளாட்சி அமைப்புகளையே சேரும். பாலிதீன் கழிவுகளால் நீராதாரங்கள், கழிவுநீர் கால்வாய்கள் தொற்று பரப்பும் பகுதிகளாக மாறி உள்ளன.பி.கோபி, அ.தி.மு.க., திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர், சித்தையன்கோட்டை.

Advertisement