காலரா தடுப்பு மருந்தின் சோதனை வெற்றி

ஹைதராபாத்: 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'ஹில்கால்' எனப்படும் வாய்வழி காலரா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை வெற்றி பெற்றதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது.

'விப்ரியோ காலரே பாக்டீரியா'வால் மனிதர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு காலரா தொற்று ஏற்படுகிறது. மாசுபட்ட உணவு, குடிநீர், மோசமான சுகாதாரம், நெரிசலான வாழ்க்கை சூழல் போன்றவை காலரா தொற்று ஏற்பட காரணம். இந்தியாவில் ஆண்டுக்கு 20,000க்கும் மேற்பட்டோர் காலராவால் இறக்கின்றனர்.

இந்நிலையில், 'பாரத் பயோடெக்' மருந்து நிறுவனம் காலரா தொற்றுக்கு எதிராக, 'ஹில்கால்' எனப்படும் வாய்வழி தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. புதிய தடுப்பு மருந்து உருவாக்க நான்கு கட்ட சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

ஹில்கால் காலரா தடுப்பு மருந்தின் இரண்டு கட்ட சோதனைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. மூன்றாம் கட்ட சோதனை தற்போது வெற்றிகரமாக முடிந்ததாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது.

நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

ஹில்கால் வாய்வழி காலரா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. நாட்டின், 10 மருத்துவ மையங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, 1,800 பேரிடம் இந்த பரிசோதனை நடந்தது.

இந்த தடுப்பு மருந்து, ஓகாவா மற்றும் இனாபா ஆகிய இருவகை காலரா பாக்டீரியாக்களுக்கு எதிராகவும் திறம்பட செயல்பட்டன.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

இதையடுத்து, இந்த தடுப்பு மருந்து விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement