போன் ஒட்டு கேட்பு விவகாரம் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு சிக்கல்

பெங்களூரு: அரசியல்வாதிகள், மடாதிபதிகள் உட்பட 50 பேரின் தொலைபேசி உரையாடலை, சி.சி.பி., பிரிவில் உயர் அதிகாரியாக இருந்த போது அலோக் குமார் ஒட்டு கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, துறை ரீதியாக விசாரணை நடத்தும்படி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், அவருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மடாதிபதிகள்



பெங்களூரில் 2019 ல், சி.சி.பி.,யில் கூடுதல் கமிஷனராக அலோக் குமார் இருந்தார்.

அப்போது, அதிகாரிகள், மடாதிபதிகள், அரசியல்வாதிகள், தனிப்பட்ட நபர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விஷயம் மாநில அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அப்போது கூட்டணி ஆட்சியில், முதல்வராக இருந்த குமாரசாமி, அலோக் குமாரை ஏ.டி.ஜி.பி.,யாகவும்; பின், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராகவும் நியமித்தார். ஆனால், 48 நாட்கள் மட்டுமே கமிஷனர் பதவியில் இருந்தார்.

இதையடுத்து, கமிஷனர் பதவிக்கு பாஸ்கர் ராவ் பெயர் பரிசீலிக்கப்பட்டது.

இதனால் அவரது செயல்பாடு குறித்து கண்டறிய, தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க அலோக் குமார் ஏற்பாடு செய்தார்.

இது தொடர்பாக ஆடியோ வெளியே கசிந்தது.

இதனால், பாஸ்கர் ராவ் அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ., போலீசார் விசாரணையை துவக்கினர்.

அலோக் குமார் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு சி.ஏ.டி., எனும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மூலம், அவர் தடை உத்தரவு பெற்றார்.

விசாரணை



அவர் குற்றமற்றவர் என சி.பி.ஐ., அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர். இதற்கு எதிராக, நீதிமன்றத்தில் பாஸ்கர் ராவ் தொடர்ந்த வழக்கு, நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், தற்போது போலீஸ் பயிற்சி பிரிவில் ஏ.டி.ஜி.பி.,யாக உள்ள அலோக் குமார் மீது, தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து, துறை ரீதியாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கும்படி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி., பதவிக்கு உயர் போலீஸ் அதிகாரிகளான சலீம், மாலினி கிருஷ்ணமூர்த்தி, ராமசந்திரராவுடன், அலோக் குமாரின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இவர் மீது விசாரணை துவங்க உள்ளதால் அவரது எண்ணம் தவிடுபொடியானது.

Advertisement