கர்நாடகாவில் 16 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
பெங்களூரு: கேரளா, மஹாராஷ்டிராவை தொடர்ந்து, கர்நாடகாவில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை உஷாராகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளில், கொரோனா பரவியதாக தகவல் வெளியானது. தற்போது கேரளா, மஹாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் மீண்டும் பரவியுள்ளது.
கர்நாடகாவிலும் பெங்களூரு உட்பட பல மாவட்டங்களில் 16 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை உஷாராகி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா தொற்று ஏற்படுவதால், பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் தொற்று பரவாமல் தடுக்க முடியும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது நல்லது.
இது பற்றி பயப்பட வேண்டியது இல்லை. முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும்.
கைகளை அவ்வப்போது சோப் போட்டு கழுவி, சுத்தம் செய்யுங்கள். இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதிப்பது நல்லது. முடிந்த வரை தனிமையில் இருங்கள்; சமூக விலகலை பிற்பற்றுங்கள்.
மக்கள் நெரிசல் இருக்கும் இடத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். அவ்வப்போது கிருமி நாசினி பயன்படுத்துங்கள்.
பொது இடங்களில் முக கவசம் அணிந்திருப்பது பாதுகாப்பானது. முடிந்த வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிருங்கள்.
மூத்த குடிமக்கள், குழந்தைகள், கர்ப்பிணியர் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக துாய்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிக்குன்குனியா காய்ச்சல்
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மாநிலத்தில் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த விபரங்களை, அறிக்கையாக தேசிய நோய்க்கிருமிகள் பரவும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டு உள்ளது.
கர்நாடகாவில் நடப்பாண்டின் மார்ச் மாதம் வரை சிக்குன்குனியா பரிசோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 8.892; தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 238. இது வேகமாக சிக்குன்குனியா பரவுவதை காட்டுகிறது. எனவே, மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.