விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

1

சென்னை:பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், சென்னையில் நேற்று விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்திற்கு, சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், மேல்சட்டை அணியாமல், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த 45,000 கோடி ரூபாய் நிதியை, விரைவாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சட்டசபை மானிய கோரிக்கையின் போது, அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள், நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளை செயல்படுத்த, அரசு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும்.

மழையால் சேதமடைந்த மக்காச்சோளம், வாழை, சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு, அரசு நிவாரணத் தொகை மற்றும் காப்பீடு வழங்க வேண்டும்.

நடப்பாண்டு 50,000 இலவச விவசாய மின் இணைப்பை தாமதப்படுத்தாமல், விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.

Advertisement