கோடாவில் மாணவர்கள் தற்கொலை ஏன்: சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: ராஜஸ்தானின் கோடா நகரில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்வது ஏன் எனவும், மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.


ஐஐடி கோரக்பூர் விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவியும் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது.


இன்று இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜஸ்தானின் கோடா நகரில் இந்தாண்டு மட்டும் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நீதிபதி பர்திவாலா கூறியதாவது: மாநில அரசு என்ன செய்கிறது. கோடாவில் மட்டும் குழந்தைகள் தற்கொலை செய்வது ஏன்? இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் தற்கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Advertisement