ஆண்டார்மடம் சாலைக்கு விமோசனம் ஆற்று தரைப்பாலத்திற்கு எப்போது?

பொன்னேரி:பொன்னேரி அடுத்த காட்டூர் கிராமத்தில் இருந்து அபிராமபுரம், கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, ஆண்டார்மடம் வழியாக செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

சாலை முழுதும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், சிறுபாலங்கள் சேதமடைந்தும் இருந்தன. இதனால், மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிரமத்துடன் பயணித்து வந்தனர்.

இச்சாலை, கிராம மக்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, மாநில நெடுஞ்சாலைத்துறையின் இதர மாவட்ட சாலைகள் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, காட்டூர் - ஆண்டார்மடம் இடையேயான, 5.5 கி.மீ., சாலை, 6 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.அதேசமயம், இச்சாலையில் ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது, தரைப்பாலம் ஆற்றுநீரில் அடித்து செல்லப்படுவதும், நீர்வரத்து குறைந்த பின், தற்காலிக பாதை அமைப்பதும் தொடர்கிறது. தற்போதும், அதே நிலை தான் உள்ளது.

மேலும், சேதமடைந்த தரைப்பாலத்தின் வழியாக வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.

ஆண்டார்மடம் சாலைக்கு விமோசனம் கிடைத்த நிலையில், தரைப்பாலத்திற்கு எப்போது கிடைக்கும் என, கிராமவாசிகள் காத்திருக்கின்றனர். எனவே, தரைப்பாலத்திற்கு மாற்றாக, ஆரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement