ராணுவத்தை விமர்சித்தால் தண்டனை அளிக்க தயங்குகிறது தமிழக அரசு: அர்ஜுன் சம்பத் பேச்சு

5



கோவை: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் ஈடுபட்ட படைவீரர்களை பாராட்டும், 'படைப்பாளர்கள் சங்கமம்'நிகழ்ச்சி, கோவை ராம்நகர் வாணிஸ்ரீ மஹாலில் நேற்று மாலை நடந்தது.

இதில் அர்ஜுன் சம்பத் பேசியதாவது:



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற போர்வையில், தேசத்துக்கு எதிராகவும் இந்திய ராணுவத்துக்கு எதிராகவும், சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் எழுத்தாளர்கள், ஓவியர்கள், படைப்பாளர்கள் அனைவரும் தேசத்தின் பக்கமே நிற்கின்றனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின், தேசத்துரோக நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் குறிப்பிட்ட எழுத்தாளர்களை, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். ராணுவத்தை விமர்சிப்பவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதை தமிழக அரசு செய்ய தயங்குகிறது; மறுக்கிறது.


இவ்வாறு, அவர் பேசினார்.

இதில் பேராசிரியர் டாக்டர் பாலகுருசாமி பேசியதாவது:



பஹல்காம் இயற்கை எழில் சூழ்ந்த அழகான நகரம். அங்கு இயற்கையை ரசிக்க வருவோர் எண்ணிக்கை அதிகம். இதை பாகிஸ்தானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நம் பொருளாதார வளர்ச்சியை பொறுக்க முடியவில்லை.


நம்மை தொடும் போதெல்லாம், நாம் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறோம். ஆனால் இம்முறை அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு, தாக்குதல் நடத்திவிட்டோம். அதனால் இனி வாலாட்ட மாட்டார்கள்.



நம் நாட்டின் முப்படைகளின் திறன் அதிகம். தகவல்தொடர்பு, அர்ப்பணிப்பு ஆகியவை சர்வதேச நாடுகளோடு ஒப்பிட்டால், இந்தியாவுக்கு நிகர் இந்தியா தான். நம் வீரர்களுக்கு தேசப்பற்று அதிகம். அர்ப்பணிப்பு உணர்வும் மேலோங்கியிருக்கும். அதனால் நாம் தொடர்ந்து வெற்றி பெறுகிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.


இந்நிகழ்ச்சியில், இயகாகோ சுப்ரமணியம், விஜயா பதிப்பகம் வேலாயுதம், மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டதிரளான எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement