2 வீடுகள் பூட்டை உடைத்து 50 சவரன் நகை திருட்டு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 48. 'இன்போசிஸ்' நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது வீட்டில் தரை தளத்தில் உள்ள வீட்டை, காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர்,40, என்பவருக்கு வாடகைக்கு விட்டு உள்ளார்.

மேல்தளத்தில் குடும்பத்துடன் பிரகாஷ் வசித்து வந்தார். கடந்த 25ம் தேதி பிரகாஷ், செங்கல்பட்டில் உள்ள தன் மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.

ஜெய்சங்கரும் சொந்த ஊர் சென்று உள்ளார். நேற்று முன்தினம் இரவு ஜெய்சங்கர் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, இரண்டு வீட்டு பீரோவிலும் இருந்த நகைகள் திருடப்பட்டது தெரிந்தது.

இதுகுறித்து ஜெய்சங்கர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், ஜெய்சங்கர் வீட்டில் இருந்து 5 சவரன் தங்க நகைகளும், பிரகாஷ் வீட்டில் 45 சவரன் தங்க நகைகள், 18,000 ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement