'பா.ஜ., கூட்டணிக்கு விஜய், சீமான் அவசியம்' டில்லிக்கு தகவல் அனுப்பும் தமிழக நிர்வாகிகள்

சென்னை: 'தி.மு.க.,வுக்கு எதிராக, பா.ம.க., - தே.மு.தி.க.,வை உள்ளடக்கி, பலமான கூட்டணியை அ.தி.மு.க., அமைத்தாலும், த.வெ.க., அல்லது நாம் தமிழர் கட்சி இருந்தால் தான் ஓட்டுகள் சிதறுவதை தடுக்க முடியும்' என, பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு, தமிழக நிர்வாகிகள் தகவல் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., - நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே ஐந்துமுனை போட்டி ஏற்படும் சூழல் இருந்தது. இதனால் ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும் என்பதால், தி.மு.க., கூட்டணிக்கு எதிராக பலமான அணி அமைக்கும் வேலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஏப்ரலில் தமிழகம் வந்து, அ.தி.மு.க., கூட்டணியை அறிவித்தார். தொடர்ந்து, பா.ம.க., - தே.மு.தி.க., - த.வெ.க., - நாம் தமிழர் ஆகிய கட்சிகளையும் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. பெரிய கட்சியான அ.தி.மு.க.,வே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பின், பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் கூட்டணிக்கு வர தாமதம் செய்கின்றன.
இந்த சூழலில், மதுரைக்கு சமீபத்தில் வந்திருந்த அமித் ஷா, 'த.வெ.க., தரப்புடன் பேச்சு நடத்தப்பட்டதில், நம் கூட்டணிக்கு வர வாய்ப்பு குறைவு. விஜய் வந்தாலும், பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் பலன் கொடுக்காது.
த.வெ.க.,வுக்கு சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் தான் அதிகம் கிடைக்கும். அந்த ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைக்காது' என, கூறியுள்ளார்.
ஆனால், விஜய், சீமான் பா.ஜ., கூட்டணியில் அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில் விஜய், சீமான் கட்சிகள் வாங்க உள்ள ஓட்டுகளில், தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் மட்டும் இருக்க போவதில்லை; பா.ஜ., கூட்டணிக்கு வர வேண்டிய ஓட்டுகளும் உள்ளன.
உதாரணமாக, ஒரு ஓட்டுச்சாவடியில் விஜய் கட்சி, 50 ஓட்டுகள் வாங்கினால், அதில், 10 ஓட்டுகள் தி.மு.க.,வின் ஓட்டுக்களாக இருக்கும். அதேபோல், 10 ஓட்டுகள் பா.ஜ., அணிக்கு வர வேண்டியதாக இருக்கலாம்.
பா.ஜ.,வின் திராவிட எதிர்ப்பு, ஆன்மிக ஆதரவு கருத்துகளை, தற்போது சீமான் பேசி வருகிறார். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், ஒரு ஓட்டுச்சாவடியில் சீமான் 10 ஓட்டுகள் வாங்கினால், நிச்சயம் ஐந்து ஓட்டுகள் பா.ஜ., அணிக்கு வரக்கூடியதாக இருக்கும்.
இதேபோல் தமிழகம் முழுதும் இரு கட்சிகளும் பா.ஜ.,வுக்கு வரக்கூடிய ஓட்டுகளை பிரித்தால் வெற்றியை நெருங்குவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, இருவரில் ஒருவராவது இருந்தால் தான், அ.தி.மு.க., தலைமையில் பா.ம.க., - தே.மு.தி.க., என, பலமான கூட்டணியை அமைத்தாலும், பா.ஜ., அணிக்கு வரக்கூடிய ஓட்டுக்கள் சிதறுவதை தடுக்க முடியும்.
எனவே, இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் வரவில்லை என்றால், சீமானையாவது சேர்க்க வேண்டும். இதுதொடர்பான விரிவான விபரங்களை, அமித் ஷா உள்ளிட்ட மேலிட தலைவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் அனுப்பியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.









மேலும்
-
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
-
குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது; 20 பேர் உடல் ஒப்படைப்பு!
-
என்னை மன்னித்து விடுங்கள்; தந்தையிடம் பகிரங்கமாக கேட்டார் அன்புமணி!
-
உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை
-
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!