மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்

தேனி: தேனி மாவட்டம், வருஷநாடு அருகே மதுகுடிக்க பணம் தராத மனைவி அம்சகொடி 59,யை கொலை செய்த விவசாயி கணேசனுக்கு 65, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வருஷநாடு குமணன்தொழு அருகே தளிப்பாறையை சேர்ந்த விவசாயி கணேசன் 65. மனைவி அம்சகொடி 59. மகன் மணிமாறன் பெங்களூரூவில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். கணேசன் மது குடித்துவிட்டு மனைவியை தாக்குவது வழக்கம். குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் கணேசன் தகராறில் ஈடுபட்டார். மணிமாறனிடம் அம்சகொடி அலைபேசியில் கூறவே அவர் தந்தையை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கணேசன்2022 ஜன.,30ல் அம்சகொடியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். உடலை சாக்குமூடையில் கட்டிவைத்து மனைவியை காணவில்லை என நாடகமாடினார்.

துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் மனைவியை கணேசன் கொலை செய்தது தெரிந்தது. கணேசனை மயிலாடும்பாறை இன்ஸ்பெக்டர் குமரேசன் கைது செய்தார்.இந்த வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார். கணேசனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.

Advertisement