வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு

தேனி: வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து குவித்ததாக தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனர் ஏகராஜ் 58, அவரது மனைவி பிளாரன்ஸ் 50, மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
சென்னை போரூர் அய்யப்பன்தாங்கல் ஏகராஜ். தேனி நகராட்சி கமிஷனராக 10 மாதங்களாக பணிபுரிந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். இவரது மனைவி பிளாரன்ஸ் சென்னை மதுரவயல் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.
2019 - 2024 வரை அரசு பணியில் இருந்த ஏகராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூலை 1, 3ல் தேனியில் அவரது அரசு குடியிருப்பு வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். அவர் ஜூன் 26 - ஜூலை 10 வரை மருத்துவ விடுப்பில் இருந்தார்.
வழக்குப்பதிவு
இந்நிலையில் கமிஷனர் ஏகராஜ், மனைவி பிளாரன்ஸ் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைத்துறையினர் வழக்குப் பதிந்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: விழுப்புரம் தென்பேர் கிராமத்தைச் சேர்ந்த ஏகராஜ் 1994ல் எரிசக்தித்துறையில் தட்டச்சராக பணியில் சேர்ந்தார். 23 ஆண்டுகளுக்கு பின் 2017ல் கமிஷனராக பதவி உயர்வு பெற்றார்.
அவர் பணிகாலங்களில் தலைமை செயலகத்தில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில் செக் ஷன் ஆபீசர், நாகபட்டினம், திருப்பத்துார், ராணிபேட்டை, ஊட்டி நகராட்சிகளில் கமிஷனராக பணியாற்றியுள்ளார். 2019 ஏப்., 1 முதல் 2024 ஜூன் 30 வரை தனக்குள்ள 'செக்' பவரை வைத்து, மக்களிடம் நேர்மையற்ற முறையில் முறைகேட்டில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
தற்போது சென்னை போரூர் அய்யப்பன்தாங்கலில் அவர் வசிக்கும் வீடு மனைவி பெயரில் ரூ.85 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். மகன், மகள் மருத்துவ படிப்பிற்காக ரூ.1.50 கோடியை மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தியுள்ளார். ரூ.50 லட்சத்திற்கு 4 கார்கள், ரூ.50 லட்சத்திற்கு தங்க நகைகள் கமிஷனரால் வாங்கப்பட்டுள்ளது. மகள் திருமணத்திற்கு ரூ.15 லட்சம் செலவழித்துள்ளார்.
அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஐந்தாண்டுகளில் ஏகராஜாவின் சொத்து மதிப்பு 2 கோடியே 73 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் 2019- 2024 வரை அரசுப்பணியில் இருந்த ஏகராஜூக்கு ரூ.ஒரு கோடியே 33 லட்சத்து 60 ஆயிரம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. வருவாயை விட கூடுதலாக 205 சதவீதம் சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சுமத்ரா போலீசார் விசாரித்து வருகின்றனர்.










மேலும்
-
அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்; அண்ணாமலை கிண்டல்
-
பா.ம.க., எதிர்காலம் நான் தான்; சிங்கத்தின் கால்கள் பழுதுபடாது என்கிறார் ராமதாஸ்!
-
2026ல் தி.மு.க., கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
-
விமானிகள் சம்பாஷணைகளை வைத்து எந்த முடிவுக்கும் வராதீர்கள்: மத்திய அரசு விளக்கம்
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது கூட்டணியல்ல; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
நாய்களுக்கு வீட்டில் தயாரித்த சுவையான உணவு டோர் டெலிவரி: கேரளாவில் புது முயற்சி சக்சஸ்!