கடத்த முயன்ற ஆட்டோ டிரைவரை 'காம்பசால்' குத்தி தப்பிய மாணவி

3

தானே: மஹாராஷ்டிராவில், தன்னை கடத்த முயன்ற ஆட்டோ டிரைவரிடம் இருந்து, 16 வயது பள்ளிச்சிறுமி தன் சமயோஜித புத்தியால் தப்பித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி தன் வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி அச்சிறுமி பள்ளிக்கு சென்றார்.

அப்போது டிரைவருடன் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரும் ஆட்டோவில் இருப்பதை அச்சிறுமி கண்டார்.

எனினும், அந்த ஆட்டோவில் ஏறி தன் பள்ளி அருகே சென்றபோது ஆட்டோவை நிறுத்தாமல், அந்த டிரைவர் இன்னும் வேகமாக சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி, ஆட்டோவை நிறுத்தும்படி அலறியுள்ளார்.

அப்போது, தான் கடத்தப்படுவதை உணர்ந்த அவர், சமயோஜிதமாக தன் பள்ளிப் பையில் வைத்திருந்த 'ஜியாமெட்ரி பாக்ஸ்'சில் இருந்த, 'காம்பஸ்'சை எடுத்து ஆட்டோ டிரைவரை சரமாரியாக குத்தினார்.

இதைத்தொடர்ந்து அருகில் இருந்த மர்ம நபரை தள்ளிவிட்டு, ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து அச்சிறுமி தப்பினார்.

உடனே, அருகே உள்ள தன் பள்ளிக்கு சிறுமி சென்றடைந்தார். பின்னர், தனக்கு நிகழ்ந்ததை அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரின்படி இரண்டு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement