டில்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து 6 பேர் உயிரிழப்பு

புதுடில்லி: வடகிழக்கு டில்லி, சீலம்பூர் வெல்கம் காலனியில், நான்கு மாடி கட்டடம் இடிந்து, கட்டட உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட, ஆறு பேர் உயிரிழந்தனர். 1 வயது குழந்தை உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.

தலைநகர் டில்லியில் சமீபகாலமாக மிகப்பழமையான கட்டடங்கள் இடிந்து விழுகின்றன.

சதர் பஜார் லோஹியா சவுக், மித்தாய் புல் அருகே, பரா இந்துராவ் பகுதியில், மூன்று மாடி வணிகக் கட்டடம், நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு இடிந்து மனோஜ் சர்மா, 46, என்பவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், வடகிழக்கு டில்லி வெல்கம் காலனி இத்கா சாலை அருகே, நான்கு மாடி கட்டடம் நேற்று காலை, 7:00 மணிக்கு இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

இடிபாடுகளை அகற்றும் போது, கட்டட உரிமையாளர் மத்லுப், 50, அவரது மனைவி ரபியா, 46, மகன்கள் ஜாவேத், 23, அப்துல்லா, 15, மற்றும் ஜூபியா, 27, அவரது மகள் போசியா, 2 ஆகிய ஆறு பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

மத்லுப் மகன்கள் பர்வேஸ், 32, நவேத், 19, மருமகள் சிசா, 21, பேரன் அஹமது, 1, எதிரில் உள்ள வீட்டில் வசிக்கும் கோவிந்த், 60, அவரது சகோதரர் ரவி காஷ்யப், 27, இருவரது மனைவியர் தீபா, ஜோதி, 27, ஆகியோர் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கட்டட உரிமையாளர் மத்லுாப் தன் குடும்பத்தினருடன், நான்காவது மாடியில் வசித்தார். தரைத்தளம் மற்றும் முதல் தளம் காலியாக இருந்தது. இந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததில், எதிரில் உள்ள கட்டடமும் சேதம் அடைந்தது.

Advertisement