கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு சாகும் வரை சிறை தண்டனை

2

திருப்பத்தூர்: திருப்பதி ரயிலில் பலாத்கார முயற்சியின் போது கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளி ஹேமராஜூக்கு சாகும் வரை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


@1brஆந்திராவைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி ஒருவர் கோவையில் இருந்து திருப்பதி இண்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்தார். ரயில் ஜோலார்பேட்டையை கடந்து சென்று கொண்டிருந்தது. பயணத்தின் போது ரயிலில் உள்ள கழிவறைக்கு கர்ப்பிணி சென்றுள்ளார். அப்போது கே.வி. குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜூ என்பவன் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.


இதை கண்ட அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி கூச்சல் எழுப்பவே, ரயிலில் இருந்து அவரை ஹேமராஜூ கீழே தள்ளிவிட்டுள்ளான். பின்னர் அவர் தலையில் பலத்த காயத்துடன், கை, கால் முறிந்து போக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.


அதன் பின்னர் கர்ப்பிணி கொடுத்த தகவலின் பேரில், விசாரணை நடத்திய போலீசார், ஹேமராஜூவை அடையாளம் கண்டு கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர். திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.


பலகட்ட விசாரணைகளுக்கு பின்னர், ஹேமராஜூ குற்றவாளி என்று கோர்ட் அறிவித்தது. அவனுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவிப்பதாகவும் தெரிவித்து இருந்தது. அதன்படி தீர்ப்பு விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது.


தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;


குற்றவாளி ஹேமராஜூக்கு சாகும் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. ஹேமராஜூக்கு சிறையில் எந்த சலுகையும் வழங்கக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான மருத்துவ சிகிச்சைக்கு உண்டான செலவை அரசே ஏற்க வேண்டும்.

வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தர வேண்டும்.

இந்த தொகையை ரயில்வே சார்பில் ரூ.50 லட்சமும், தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சமும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement