தெலுங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு பின்பற்ற காங்., கோரிக்கை

பெங்களூரு: 'மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியை முக்கிய காரணியாக கருத வேண்டும். இதற்கு தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என, மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் ஓ.பி.சி., பிரிவு தலைவர்களின் ஆலோசனை கூட்டம், பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று, தனியார் ஹோட்டலில் கூட்டம் நடந்தது.

முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் ஓ.பி.சி., பிரிவு தலைவர் அனில் ஜெய்ஹிந்த், முன்னாள் முதல்வர்கள் ராஜஸ்தான் - அசோக் கெலாட், புதுச்சேரி - நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சித்தராமையா அளித்த பேட்டி:

'பெங்களூரு பிரகடனம்' என்ற பெயரில், காங்கிரஸ் ஓ.பி.சி., பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் வலுவான உறுதிப்பாட்டால் தான், இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஜாதியையும் ஒரு முக்கிய காரணியாக கருத வேண்டும்.

இதற்கு தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீட்டிற்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்கி, கல்வி, சேவை, அரசியல், பிற துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு பொருத்தமான இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்வது.

அரசியலமைப்பு பிரிவு 15(5)ன் படி, தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடைக்க செய்ய வேண்டும் என்றும், ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement