அறிவியல் யுகத்தில் குடிநீர் கிடைப்பதிலும் பாகுபாடா: உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை: அறிவியல் யுகத்தில் சில சமூகங்கள் மற்ற சமூகங்களுடன் போட்டியிட்டு, இயற்கை வளமான தண்ணீரை பெறுவதில் பாகுபாடு நிலவுவது பரிதாபமாக உள்ளது.
தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டையில் குடிநீர் பிடிப்பதில், பாகுபாடு இல்லாததை உறுதி செய்ய கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தலைவன்கோட்டையில் சிலரை அவதுாறாக பேசி, மிரட்டல் விடுத்தததாக திருமலைச்சாமி என்பவர் மீது புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்தனர். அவருக்கு கீழமை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்தது. இதற்கு எதிராக திருமலைச்சாமி உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி ஆர்.என். மஞ்சுளா விசாரித்தார். புகார்தாரர் முனியம்மாள்,'மற்ற சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர் குழாயிலிருந்து, தண்ணீர் பெறுவது கடினம்,' என்றார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தண்ணீர் உட்பட இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானவை. அறிவியல் யுகத்தில், சில சமூகங்கள் மற்ற சமூகங்களுடன் போட்டியிட்டு, பொது வளங்களிலிருந்து தங்கள் பங்கை பெறுவதற்கு, இரண்டாம் நிலையில் காத்திருக்க வேண்டும் என்பது வியப்பு, பரிதாபமாக உள்ளது. தங்களை சலுகை பெற்றவர்களாக கருதும் ஒடுக்குமுறையாளர்களால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், குறிப்பிட்ட அடிமட்டத்தில் தற்போதுவரை விஷயங்கள் அப்படியே உள்ளன.
சிலர் மனதில் உள்ள வர்க்க ஜாதி மனநிலையை அகற்றுவது எளிதல்ல. அதிகாரத்திலிருப்பவர்கள் ஜாதிய பாகுபாடுகளை பார்த்து கொண்டு அலட்சியமாக இருக்க முடியாது. தேவைப்படுவது தீர்வு, சத்தமில்லாத மாற் றம், செயல்தான். ஜனநாயகம் என்பது வலிமையானவர்களின் ஆட்சி அல்ல; சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்கிறது.
தண்ணீர் போன்ற பொதுவான வளங்களை பகிர்ந்து கொள்வதில்கூட, இன்னும் பிற சமூகத்தினரால் பிறர் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர். தண்ணீர் இல்லாமல் யாரும் வாழ முடியாது. மாசுபடாத தண்ணீரை பெறுவது அடிப்படை உரிமை.
தலைவன்கோட்டையில் இப்பாகுபாடு இல்லாததை உறுதி செய்ய தென்காசி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து தெருக்களிலும் போதிய குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்க வேண்டும். அவை அனைவரின் பயன்பாட்டிற்கும் பொதுவானவை. பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது.
கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
மேலும்
-
தமிழகத்தில் உளவுத்துறை உறங்குகிறதா? ஹிந்து முன்னணி சந்தேகம்
-
சங்கூர் பாபா மதமாற்ற விவகாரம்; 14 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி; ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை!
-
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது
-
பஞ்சாப் தொழிலாளிக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு
-
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு