'இயல்பைவிட கை விரல் இருப்பதால் பணி நிராகரிக்கக்கூடாது' உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: இயல்பானதைவிட விரல் இருப்பதாகக்கூறி (பாலிடாக்டைல்) மத்திய படை பணி வாய்ப்பில் நிராகரிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இடையவலசை பாலமுருகன் தாக்கல் செய்த மனு: இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) ஆகியவற்றில் 'கான்ஸ்டபிள்கள்' பணிக்கு மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் 2023 நவ.,23ல் அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பித்தேன். கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடந்தது. எனது இடது கையில் இயல்பானதைவிட விரல் (பாலிடாக்டைல்) இருப்பதாகக்கூறி நிராகரிக்கப்பட்டேன். மறு மருத்துவ பரிசோதனை 2024 ல் நடந்தது. ஆவடியிலுள்ள சி.ஆர்.பி.எப்., தலைமை மருத்துவ மறு ஆய்வு அலுவலர் என்னை நிராகரித்தார். அதை ரத்து செய்ய வேண்டும். பரிசோதனையை மீண்டும் நடத்த வேண்டும். இக்குறைபாட்டை பொருட்படுத்தாமல் மத்திய ஆயுத படைக்கு என்னை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி விவேக்குமார் சிங் விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி: மனுதாரரின் கையின் கூடுதல் விரல் எதுவும் இல்லை. இடது கை கட்டைவிரல் சரியற்ற அளவில் உள்ளது. அதை 'பாலிடாக்டைல்' என வகைப்படுத்த முடியாது. தற்போதைய மறு ஆய்வு மருத்துவ பரிசோதனை அறிக்கை தவறானது.

மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்: மனுதாரருக்கு எக்ஸ்ரே, டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை நடந்தது. இடது கை கட்டைவிரலில் 'பாலிடாக்டைல்' இருப்பதால் தகுதியற்றவர் என நிராகரிக்கப்பட்டார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இக்கால கட்டத்தில், அரசு பணியில் சேர்வதன் நோக்கம் பாதுகாப்பான வாழ்க்கையாக கருதப்படுகிறது. முன்பு அரசு பணி ஓய்வூதியம் பெறக்கூடியதாக இருந்தது.

தற்போது நிதி நெருக்கடி காரணமாக, ஓய்வூதியம் வழங்க முடியவில்லை. ஆனாலும் அரசு வேலையில் பாதுகாப்பு உள்ளது. மாற்றுத்திறன் என்பது கடவுளின் செயல். அதை மனித தவறாக கருத முடியாது. பரந்த கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை தொடர்பான சட்டங்கள், விதிகளை உருவாக்கும் அரசின் அமைப்புகள் மற்றும் அதிகாரிகள், மருத்துவ குறைபாட்டின் தொழில்நுட்பத்தை பற்றி பேசுவதற்கு பதிலாக, மனிதாபிமான அணுகுமுறையில் பார்க்க வேண்டும். ஒருவர் மற்ற சாதாரண நபர்களைப்போல் கடமையைச் செய்ய முடிந்தால், அவரை மருத்துவ ரீதியாக தகுதியற்றவராகக்கூறி பணி வாய்ப்பில் நிராகரிக்கக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத்துறைகள் பாகுபாடு காட்ட முடியாது. அவர்களுக்கு பணியில் நியாயமான ஒதுக்கீட்டை சட்டம் கட்டாயமாக்குகிறது. இவ்வழக்கில் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதே. மருத்துவ பரிசோதனை அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். மனு அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement