இந்திய அணியை அச்சுறுத்தும் ஆடுகளம்: 4வது டெஸ்டில் இன்னொரு சோதனை

மான்செஸ்டர்: மான்செஸ்டர் போட்டிக்கான ஆடுகளம் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கலாம்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் வரும் 23ல் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்குகிறது. இதில் இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டும்.
நிதிஷ் குமார் நீக்கம்:
இப்போட்டிக்கு முன் இந்திய முன்னணி வீரர்கள் காயம் அடைந்தது துரதிருஷ்டம். 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் 'ஜிம்'மில் பயிற்சி செய்த போது இடது முழங்காலில் காயம் அடைந்தார். எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். இடது கை கட்டை விரல் காயத்தால் அர்ஷ்தீப் சிங்கும் நான்காவது டெஸ்டில் இருந்து விலகினார்.
இடுப்பு பகுதி காயத்தால் ஆகாஷ் தீப் அவதிப்படுகிறார். இதனால் பும்ரா, சிராஜ் தொடர்ந்து விளையாட வேண்டும். பிரசித் கிருஷ்ணா, புது வரவு அன்ஷுல் கம்போஜ் 24, இடையே போட்டி காணப்படுகிறது. சென்னை அணிக்காக விளையாடிய கம்போஜ், சிறப்பாக பந்துவீசுவதாக தோனியே பாராட்டியிருந்தார். கம்போஜ் அறிமுக வாய்ப்பு பெறலாம்.
தேறினார் ரிஷாப்:
நிதிஷ் குமார் இல்லாத நிலையில் தமிழக பேட்டர் சுதர்சனுக்கு இடம் கிடைக்கலாம். நான்காவது 'வேகமாக' ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டால், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படலாம். விரல் காயத்தில் இருந்து மீண்ட ரிஷாப் பன்ட் நேற்றைய பயிற்சியில் பேட்டிங், கீப்பிங் செய்தது ஆறுதலான விஷயம். பயிற்சி செய்யும் பகுதி ஈரமாக இருந்ததால், வழுக்கி விழ வாய்ப்பு அதிகம். இதனால் பும்ரா அதிக நேரம் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை.
பும்ரா உறுதி:
சிராஜ் கூறுகையில்,''வீரர்கள் காயம் காரணமாக இந்திய கூட்டணி அடிக்கடி மாறுகிறது. மான்செஸ்டர் டெஸ்டில் பும்ரா நிச்சயம் பங்கேற்பார். ஆகாஷ் தீப் காயத்தின் தன்மை பற்றி 'பிசியோதெரபிஸ்ட்' சோதனை செய்கின்றனர். அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக கம்போஜ் இடம் பெற்றுள்ளார்,''என்றார்.
குல்தீப் வாய்ப்பு:
இதற்கிடையே மான்செஸ்டரில் கடந்த சில நாளாக லேசான மழை பெய்தது. இதனால் ஆடுகளத்தில் புற்கள், ஈரப்பதம் காணப்படுகிறது. இது பவுலர்களுக்கு சாதகமானது. வீரர்கள் காயத்தால் தவிக்கும் இந்திய அணிக்கு ஆடுகளமும் தொல்லை தரலாம்.
இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் கூறுகையில்,''மான்செஸ்டர் போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிடலாம். ஆடுகளம் போகப் போக 'ஸ்பின்னர்'களுக்கு ஒத்துழைக்கும். இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு அளிக்கலாம்,''என்றார்.
'சீக்ரெட் ஆப்' சிராஜ் 'எனர்ஜி'
டெஸ்ட் தொடரில் ஓய்வில்லாமல் பந்துவீசுகிறார் சிராஜ். கடந்த 3 போட்டிகளில் 109 ஓவர் வீசி, 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இரு போட்டிகளில் பும்ரா 86.4 ஓவர், பிரசித் கிருஷ்ணா 62 ஓவர், ஆகாஷ் தீப் 72.1 ஓவர் வீசியுள்ளனர்.
இதன் ரகசியம் குறித்து சிராஜ் கூறுகையில்,''நல்ல உடற்தகுதியுடன் ஆரோக்கியமாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. நாட்டுக்காக விளையாடுவதால், எனக்கு தேவையான அனைத்து சக்தியும் கிடைத்து விடுகிறது. களத்தில் நுாறு சதவீத திறமை வெளிப்படுத்துவதே இலக்கு.
கடந்த லார்ட்ஸ் டெஸ்டில் போராடினோம். இந்த தோல்வியில் இருந்து மீள எனக்கு நீண்ட நேரம் ஆனது. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 9.2 ஓவர், 10 ஓவர் வீசியது வியக்க வைத்தது. இங்கிலாந்தின் 'டியூக்' வகை பந்துகள் 10 ஓவர் கூட தாக்குப்பிடிப்பதில்லை. பந்துவீசுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்,''என்றார்.
மேலும்
-
ரயில்வே பாதுகாப்பு தனியார் வசம் போகுதா ?
-
ராஜஸ்தானில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு
-
ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
-
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை
-
ரூ.7 கோடி முதலீடு, ரூ.90 கோடி லாபம்; 2025ல் நாட்டிலேயே அதிக வசூல் படைத்த டூரிஸ்ட் பேமிலி
-
நாளைய மின்தடை