பொன்னேரியில் வீட்டுமனை பட்டா கேட்டு வருவாய் துறையிடம் மனு

பொன்னேரி:வீட்டுமனை பட்டா கேட்டு, கிராம மக்கள் பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், நீண்டகாலமாக வீட்டுமனை பட்டா கேட்டு, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டும், வருவாய்த்துறையிடம் மனு அளித்தும் வருகின்றனர்.

வீட்டு மனை பட்டா கிடைக்காமல் மேற்கண்ட குடும்பத்தினர் விரக்தியில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று மேற்கண்ட குடியிருப்பு வாசிகள், வீட்டுமனை பட்டா கேட்டு, மீண்டும், பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.

அங்கிருந்த அதிகாரிகளிடம் இது தொடர்பான கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றனர்.

மனுவில் உள்ள தாவது:

ஏலியம்பேடு கிராமத்தில் உள்ள அம்மன்கோவிலில் 10ம்தேதி ஆடித்திருவிழா நடைபெறுகிறது.

அதற்காக, குடிமனை பட்டா உள்ளவர்கள் மட்டுமே கூடி கூட்டம் நடத்தினர்.

வீட்டுமனை பட்டா இல்லாத காரணத்தால், பூர்வ குடிகளான எங்களை புறக்கணித்து உள்ளனர். எங்களை புறக்கணித்தது சட்ட விரோதமானது.

இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும், வீட்டுமனை பட்டா வழங்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் உள்ளது.

Advertisement