ஓய்வூதிய திட்டங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு உயர்நிலைக்குழு அமைப்பு

புதுடில்லி: ஓய்வூதிய திட்டங்களை ஒழுங்குபடுத்தவும், மேம்படுத்தவும் மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

நம் நாட்டில் பி.எப்.ஆர்.டி.ஏ., - இ.பி.எப்.ஓ., உள்ளிட்ட சில அமைப்புகள் ஓய்வூதிய திட்டங்களை வழங்கி வருகின்றன. அவற்றில், தற்போதைய நிலவரப்படி, 12 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே உறுப்பினராக உள்ளனர்.

பல்வேறு அமைப்புகளின் பல்வேறு ஓய்வூதிய திட்டங்களால், அவற்றின் பலன்கள், வரி பிடித்தங்கள் ஆகியவை குறித்து அறிந்து கொள்வதில் உள்ள சிக்கலால், ஓய்வூதிய திட்டங்களில் தொழிலாளர்கள் சேர்வது குறைவாக இருக்கிறது.

இதனால், பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இந்த பலன்கள் கிடைப்பதில்லை. அனைத்து தரப்பு தொழிலாளர்களும் பலன் பெறும் வகையில், பல்வேறு அமைப்புகளின் கீழ் செயல்படும் ஓய்வூதியத் திட்டங்களை ஒழுங்குபடுத்தவும், மேம்படுத்தவும் மத்திய அரசு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக நிதி சேவைகள் துறை செயலர் இருப்பார். தொழிலாளர் துறை, பெருநிறுவன விவகாரங்கள் துறை, வருவாய் துறை, நிலக்கரித் துறை ஆகியவற்றின் செயலர்களும், செபி அமைப்பின் தலைவர் உள்ளிட்ட தொழில்துறையை சேர்ந்தவர்களும், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையரும் அந்த குழுவில் இடம்பெறுவர்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபடி, ஓய்வூதியத் திட்டங்களை ஒழுங்குபடுத்துவது, புதிய ஓய்வூதியத் திட்டங்களில் இன்னும் இணையாத தொழிலாளர்களை சேர்க்கும் வகையில் அதை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இந்த உயர்நிலைக் குழு ஈடுபடும்.

Advertisement