என் குழந்தைகளுக்கு ரங்கராஜ் தான் அப்பா; ஜாய் க்ரிசில்டா பரபரப்பு புகார்

சென்னை: தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டா புகார் அளித்துள்ளார்.


மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில், ஜாய் க்ரிசில்டா என்பவருடன் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. முதல் மனைவியை விட்டு பிரிந்து விட்டதாகவும், ஜாய் க்ரிசில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகின.

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டா சென்னை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;என்னோட கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடன் எந்த தொடர்பிலும் இல்லை. எனக்கும், என்னுடைய குழந்தைகளுக்காகவும் இந்தப் புகாரை கொடுத்துள்ளேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார். இந்தக் குழந்தைக்கான ஒரு பதில் வேண்டும். அவர் தான் இந்தக் குழந்தையின் அப்பா. அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

நாங்கம் திருமணம் செய்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அபார்ட்மென்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இது அனைவருக்கும் தெரியும். முதல் திருமணம் நடந்தது தெரியாது.

முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக என்னிடம் கூறினார். அதை நம்பி தான் திருமணம் செய்து கொண்டேன். ஒன்றரை மாதமாக தொடர்பில் இல்லாமல் இருக்கிறார். சென்னையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். அவர் என்னை அடித்தார்.

இப்போது, நான் 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். அப்படியே என்னை விட்டு விட்டு சென்று விட்டார். எனக்கும், என் குழந்தைக்கும் ஒரு பதில் வேண்டும். ரங்கராஜை நேரில் சந்திக்க முயற்சித்தேன். ஆனால், அவரை என்னிடம் பேச விடாமல் தடுத்துள்ளனர். எனக்கு ஒரு தீர்வு கிடைத்தவுடன் நான் மீடியாவை சந்தித்து விளக்கம் அளிப்பேன்.

நான் வந்து அவருடன் வாழ வேண்டும். அவரை கைது செய்வார்களா? என்பதை போலீசார் தான் முடிவு செய்வார்கள்.

ரங்கராஜ் பிசினஸில் இருந்ததாலும், அவரது அம்மா, அப்பா கேட்டுக் கொண்டதாலும், திருமண புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தேன். கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவரை பார்த்தேன். அவர் பேச தயாராக இல்லை. பேச முயன்ற போது, அனைவர் முன்னிலையிலும் என்னை அடித்தார். கருவையும் கலைக்கச் சொன்னார், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement