அட, பார்ரா! பறவைகளுக்கும் 'ஹாஸ்டல்'

''வீ ட்டில் தனியாக பறவையை விட்டு வெளியூர் செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்காகவே, பறவைக்கான விடுதி அமைத்தோம்,'' என்கிறார், சென்னை, கோடம்பாக்கம், பெட் கேம்பஸ் உரிமையாளர் சசிதரண்.

அவர் நம்மிடம் பகிர்ந்தவை:


பப்பி, மியாவ் போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்போர், வெளியூர் செல்லும் போது தங்க வைக்க, பல கென்னல், ரெசார்ட்டுகள் உள்ளன. ஆனால், பறவையை யாரிடம் விடுவது, அதற்கு எப்படி உணவளிப்பது என்ற கேள்விகளுக்கு பின்னால், பலரும் ஓடியதை உணர முடிந்தது. இதற்காகவே, பிரத்யேக பறவை விடுதி அமைக்க முடிவெடுத்தோம்.

பப்பி, மியாவ் போல, பறவைகளை வெளியிடங்களுக்கு அதிகளவில் எடுத்து செல்லமாட்டோம். இதனால், புதிய சூழலுக்கு இவை உடனே பழக்கப்படாது. ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்ட பறவையாக இருந்தால் புதிய ஆட்களிடம் எளிதில் நெருங்கிவிடும். சில பறவைகள், புதிய ஆட்கள் உணவு கொடுத்தாலும் வேகமாக கத்தி, கடிக்க வரும்.

சில சமயங்களில், வேகமாக சிறகை அடித்து கொண்டே இருப்பது, முகத்தை திருப்பி வைத்து உறங்குவது, தண்ணீர், உணவு சாப்பிடாமல் இருப்பது என அடம்பிடிக்கும். இப்படி இருந்தால், பறவை மன அழுத்தத்தில் இருப்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

இச்சமயங்களில், அதனுடன் பிற பறவைகளை அருகே இருக்க செய்யும் போது, அவை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். பறவையை தொந்தரவு செய்ய கூடாது. தண்ணீர், உணவு எடுத்து கொள்ளாத பட்சத்தில் மட்டும் 'சிரஞ்ச்' வாயிலாக உணவளிப்போம்.

பிறந்து சில நாட்களிலே ஆன பறவை முதல், வயதான பறவை வரை இங்கே தங்க வைக்கிறோம். பறவைகளுடன் நீண்ட ஆண்டுகள் இருப்பதால் இவற்றை எப்படி மகிழ்ச்சியாக பார்த்து கொள்ள வேண்டுமென்ற அனுபவம் உள்ளது. சில சமயங்களில், பழங்களே சாப்பிட்டு பழகாத பறவை கூட, இங்கு தங்கும் சில நாட்களில் அவற்றை சாப்பிட பழகி கொள்ளும்.

வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு செல்லும் சிலர், மாதக்கணக்கில் பறவையை விட்டு செல்வர். உரிமையாளரின் அறிவுரைப்படி, பறவைக்கான உணவு வழங்குவோம். மழைக்காலத்தில் விடுதிக்கு வரும் பறவைக்கு சில சமயங்களில், வயிற்றுபோக்கு தொந்தரவு ஏற்படலாம். இதற்கான மருந்துகளை முறையாக வழங்கும் போது உடனே குணமாகிவிடும்.

எங்களின் பெட் கேம்பஸில், பறவை, பப்பி, மியாவ் போன்றவை, அதற்கான உணவுகள், விளையாட்டு பொருட்களை விற்பனை செய்கிறோம். இங்கு ஏற்கனவே பறவைகள் இருப்பதால், விடுதிக்கு புதிதாக வரும் பறவைகள், இச்சூழலை உடனே ஏற்று கொள்கின்றன. பெரிய வகை பறவைக்கு ஒருநாளைக்கு 400 ரூபாய் வரையிலும், சிறிய வகை பறவைக்கு 100 ரூபாயும் கட்டணம் பெறுகிறோம். இங்கிருந்து பறவை மீண்டும் உரிமையாளரிடம் செல்லும் போது ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்கிறோம், என்றார்.

Advertisement