இந்தியாவுக்கு ஆதரவான மக்கள் பிரசாரத்திற்கு ஆதரவு; எலான் மஸ்கை வம்பிழுத்த டிரம்ப் ஆலோசகர்

15

வாஷிங்டன்: இந்தியாவுக்கு ஆதரவாக மக்களின் கருத்துகளை எக்ஸ் வலை தள பதிவில் வெளிப்படுத்துவதன் மூலம் பிரசாரத்தை அனுமதிக்கிறார் என்று எலான் மஸ்கை, டிரம்ப் ஆலோசகர் பீட்டர் நவ்ரோ குற்றம்சாட்டி உள்ளார்.



ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், உக்ரைன் போருக்கு இந்தியா நிதி உதவி செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவ்ரோ எக்ஸ் வலைதள பதவில் குற்றம்சாட்டி இருந்தார்.


அவரின் இந்த விமர்சனத்திற்கு இந்தியாவில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. அதே நேரத்தில் நவ்ரோவின் கருத்தை எக்ஸ் பயனாளர்கள் உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தினர்.


கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது வெறுமனே லாபத்திற்காக அல்ல, எண்ணெய் பாதுகாப்புக்கு என்று சுட்டிக்காட்டினர்.


ரஷ்யா-இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டை எக்ஸ் பயனாளர்கள் ஏற்க மறுத்ததால் நவ்ரோ அதிருப்தி அடைந்துள்ளார்.


தனது கோபத்தை எக்ஸ் வலைதள பதிவின் மூலம் காட்டிய நவ்ரோ, மக்களின் முட்டாள்தனமாக பதிவுகளை எலான் மஸ்க் அனுமதிக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.


அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;


மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை (எலான் மஸ்க்) அனுமதிக்கிறார். கீழே இருக்கும் முட்டாள்தனமான பதிவும் அப்படித்தான். லாபம் பெறவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது.


உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் முன் இந்தியா எதையும் வாங்கவில்லை. உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை பறிப்பதை நிறுத்துங்கள்.


இவ்வாறு தமது எக்ஸ் வலைதள பதிவில் நவ்ரோ குறிப்பிட்டுள்ளார்.

Advertisement