அன்று வேட்டை; இன்று விவசாயம்! : சென்னானுார்

@facebook@facebook
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், சென்னானுார் கிராமத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வில், மலைப் பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. இதையடுத்து, 2024ல் அகழாய்வுப் பணிகள் துவங்கப்பட்டு, கடந்த மே மாதம், அகழாய்வு இயக்குநர் சீ.பரந்தாமன் தலைமையில், முதல்கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்துள்ளன.
இங்கு, எட்டு அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. அவற்றில், தரைமட்டத்தில் இருந்து கீழே, 120 செ.மீ., முதல் 196 செ.மீ., ஆழம் வரை, புதிய கற்காலத்தைச் சேர்ந்த மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகள், கையால் வனையப்பட்ட பானை ஓடுகள், தேய்த்து வழுவழுப்பாக்கப் பட்ட சிவப்பு, பழுப்பு மற்றும் சாம்பல் நிற பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை, கர்நாடக மாநிலம் பிரம்மகிரி, சங்கனக்கல்லு பகுதிகளில் கிடைத்துள்ள புதிய கற்கால தொல்பொருட்களை ஒத்துள்ளன. 196 செ.மீ., முதல் 230 செ.மீ ஆழம் வரை நுண்கற்கால கற்கருவிகள் அதிகளவில் கிடைத்துள்ளன.
எலும்பு கிழிப்பான்
ஒரு குழியில், 176 செ.மீ., ஆழத்தில் முழுமையான இரண்டு பானைகளும், பானைகள் உருளாமலும், சாயாமலும் இருக்கும் வகையில், அவற்றின் அடியில் வைக்கும் வட்ட வடிவ சுடுமண் பிரிமணைகள் இரண்டும் கிடைத்துள்ளன.இதே குழியில், எலும்பால் ஆன கிழிப்பான் ஒன்றும் கிடைத்துள்ளது. இது, விலங்குகளின் தோலைக் கிழிப்பது, உரோமங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.இங்கு கிடைத்துள்ள சுடுமண் முத்திரையில், கூரான ஒரு புள்ளி மட்டும் உள்ளது. இது, மண்பாண்டங்களில், 'டிசைன்' செய்ய பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அதாவது, ஈர களி மண்ணில் பானை செய்து முடித்ததும். அதன் மீது, தேவைப்படும் இடங்களில் இந்த முத்திரையை ஒற்றி எடுக்கும்போது, புள்ளிகள் விழும். அந்த மண்பாண்டத்தை சுட்ட பின், அது நிரந்தரமாகி விடும்.
இங்குள்ள குழிகளின் மேல் அடுக்குகளில், இரும்பு கால பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில், ஏர் கலப்பையின் கொழுமுனை, அம்பு முனை, ஈட்டி முனை உள்ளிட்ட பொருட்கள் முக்கியமானவை.
முக்கியத்துவம்
பொதுவாக, தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட புதிய கற்கால வாழ்விடங்களில் ஒரு சில இடங்களைத் தவிர, அனைத்தும் புதிய கற்காலத்தின் இறுதி காலம் அல்லது இரும்பு காலத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்தவையாகவே உள்ளன.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மெருகேற்றப்பட்ட வழவழப்பான கற்கோடாரி அதிக அளவில் தொல்லியல் கள ஆய்வில் கிடைத்தாலும், அக்கால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள் மற்றும் எலும்பால் ஆன கருவிகள் கிடைக்கவில்லை.இங்கு அவை கிடைப்பதால், புதிய கற்கால வாழ்விடம் என்பது உறுதியாகி உள்ளது. புதிய கற்காலத்திற்கு முந்தைய நுண்கற்கால சான்றுகளும் இங்கு கிடைத்துள்ளன. அதேபோல், புதிய கற்காலத்திற்கு பிந்தைய இரும்பு கால சான்றுகளும் கிடைத்துள்ளன. இவை, இந்த இடத்தில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம். தமிழகத்தில் இதுபோன்ற தொடர்ச்சியான பண்பாட்டு மாற்றத்திற்கு வேறு எங்கும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
@block_B@காலவரிசைப்படி, நுண்கற்காலம், புதிய கற்காலம், இரும்பு காலம், வரலாற்று தொடக்க காலம், சங்க காலம் என, ஒவ்வொரு காலகட்டத்துக்குமான மனிதன் தன் பரிணாமத்தை வளர்த்தது குறித்து ஆய்வு செய்யும் வகையில், தமிழகத்தில் சென்னானுாரைத் தவிர வேறு எங்கும் தொல்லியல் களம் கிடைக்கவில்லை. மண்பாண்டம், கற்கருவி, இரும்பு தொழில்நுட்ப வளர்ச்சியை அறிய இது உதவுகிறது. 12,000 - 700 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் கிடைத்துள்ளன. மருத நில மக்களை ஒப்பிடும்போது, இந்த குறிஞ்சி, முல்லை நில மக்கள், தங்களின் தேவைகளில் தன்னிறைவு பெற்றும், அதிக பண்பாட்டு கலப்பு இல்லாமலும் தனித்திருப்பதால் மிகவும் மெதுவான பண்பாட்டு மாற்றம் அடைந்துள்ளதை அறிய முடிகிறது.
-சீ.பரந்தாமன் அகழாய்வு இயக்குநர்block_B
கருத்துகளை பரிமாற: naduvoorsiva@gmail.com
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மல்லிகைப் பூச்சரத்தால் வந்த வினை; பிரபல மலையாள நடிகைக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்
-
ஈமத்தாழியும்... இரும்பு பொருட்களும்... - அகழாய்வு
-
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்; வைகோ அறிவிப்பு
-
210 தொகுதிகளில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் பேட்டி
-
மணிமொழி