விவேகானந்தர் பாறை செல்லாமல் திருவள்ளுவர் சிலைக்கு தனி பாதை எம்.எல்.ஏ., வேல்முருகனால் குமரியில் சர்ச்சை

1

நாகர்கோவில்:''விவேகானந்தர் பாறைக்கு செல்ல விரும்பாதவர்கள், திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தனி பாதை அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும்,'' என, சட்டசபை உறுதிமொழி குழு தலை வரான வேல்முருகன் எம்.எல் ஏ., கூறியதால், குமரியில் சலசலப்பு ஏற்பட்டது . இதற்கு பா.ஜ., இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வேல்முருகன் தலைமையிலான சட்டசபை உறுதிமொழி குழுவினர், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில், கண்ணாடி பாலம், புத்தேரி நான்கு வழி சாலை, ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

அப்போது வேல்முருகன் கூறியதாவது:

தமிழ் அறிஞர்களின் சில அமைப்புகள் சார்பில், விவேகானந்தர் பாறைக்கு செல்லாமல், திருவள்ளுவர் சிலைக்கு நேரடியாக செல்ல வசதி வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக, விவேகானந்தர் பாறைக்கு செல்ல, சில இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் விரும்புவதில்லை என, தெரிய வந்துள்ளது.

எனவே, விவேகானந்தர் பாறைக்கு செல்லாமல், நேரடியாக திருவள்ளுவர் சிலைக்கு சென்று திரும்ப, புதிய மாற்று பாதை அமைக்க, அரசுக்கு இந்த குழு பரிந்துரைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேல்முருகனின் இந்த அறிவிப்புக்கு, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கோபகுமார் கூறியதாவது:

இதுவரை மத பேதமின்றி 2 பாறைகளுக்கும் மக்கள் சென்று வந்தனர். அவர்களை, மத ரீதியாக பிரிக்க முயற்சிக்கும் ஒரு செயலாக, வேல்முருகனின் அறிவிப்பு உள்ளது. குமரியில் மத பிரிவினையை உருவாக்கும் செயலாக, அவரது அறிவிப்பு அமைந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு, அவர் கூறினார்.

குமரி போன்ற மத கலவரங்கள் நடந்த மாவட்டத்தில், கவனமாக பேசாமல், மத வேறுபாட்டை உருவாக்கும் வகையில், அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் பேசுவது கண்டிக்கத்தக்கது என, பல்வேறு ஹிந்து அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement