வெறும் 2 சீட்டுக்காக நாங்கள் திமுகவுடன் இருக்கவில்லை: திருமாவளவன்

சென்னை : “வெறும் இரண்டு சீட்டுக்காக திமுகவுடன் நாங்கள் இருக்கவில்லை. அந்த இரண்டு சீட்டை கூட பெற முடியாதவர்கள் இருக்கின்றனர்,” என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என நினைத்த விடுதலைப் போராட்ட வீரர்கள் யாருமே, ஜாதி என்ற சமூக கூறு குறித்து சிந்திக்கவில்லை. தற்போது, இந்தியாவில் எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், எதைத் தொட்டாலும், ஜாதியை அளவுகோலாக எடுத்துக் கொள்கின்றனர். நாங்கள், பிராமணர்களை வெறுப்பதில்லை.
'வெறும், இரண்டு சீட்டுக்காக திமுகவுடன் இருக்கிறேன்' என, என்னை விமர்சனம் செய்கின்றனர். ஆனால், அந்த இரண்டு சீட்டை கூட சிலரால் வாங்க முடியவில்லை. பாஜ சராசரியான அரசியல் கட்சி இல்லை. அவர்களால் ஏற்படும் கருத்தியல் பின்னடைவை சரிசெய்ய, 50 ஆண்டுகள் ஆகும். அந்த அளவுக்கு, கடந்த 10 ஆண்டுகளில் கருத்தியல் பின்னடைவையும், ஆதிக்க வெறியையும் பாஜ ஊட்டியுள்ளது. ஈவெராவையும், திமுகவையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் திராவிட அரசியலை எதிர்க்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.










