எவரும் பொறுப்பேற்காத செய்தி, செய்தியே அல்ல: ஜெயமோகன்

21


இன்று நாம் ஜனநாயகம், மனித உரிமைகள் என்று சொல்லும் அனைத்துமே ஒரே ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இன்றைய நாடு, நவீன அரசு, நவீனக் கல்வி ஆகியவை கூட அதைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதுதான் 'செய்தி' என்பது. முன்பு செய்தி என்பது அரசால் பரப்பப்படுவதாகவோ மக்களின் வாய்மொழியாக பரவுவதாகவோ தான் இருந்தது.


மிக மெல்லத்தான் செய்தி பரவியது. பரவும்போதே உருமாறி திரிபடைந்தது. ஒரே செய்தி பல்லாயிரம்பேரைச் சென்றடையத் தொடங்கியது நாளிதழ்களின் வருகையால்தான். நாளிதழ்களே, செய்தி என்னும் புறவயமான ஒரு நிகழ்வை கட்டமைத்தன. செய்தி, நவீன வாழ்க்கையின் அடிப்படையாக ஆகியது.


செய்தித்தாள் உருவான தொடக்க காலகட்டத்தில் உருவானது, 'தினமலர்' நாளிதழ். திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்த பழைய கேரளத்தில் விடுதலைப் போருடன் இணைந்து செயல்பட்டது. இங்கே நிகழ்ந்த சமூக மாறுதல்களின் காரணியாக அமைந்தது. அதன்பின் தமிழகம் முழுக்க பரவி முதன்மை நாளிதழாக ஆகியது.


தமிழக மக்களின் குரல்களில் வலுவான ஒரு தரப்பாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்று, நவீன சமூக ஊடகங்களின் காலகட்டத்தில், செய்தி என்பதே மறைந்து கொண்டிருக்கிறது. எவர் வேண்டுமானாலும் எதையும் இன்று செய்தியாக முன்வைக்க முடியும். அதற்கான ஊடகத்தை தொழில்நுட்பம் அளிக்கிறது. ஆகவே வதந்தியே செய்தியாக ஆகும் நிலை வந்துள்ளது. நம் காதில் விழும் செய்திக்கு எவர் பொறுப்பேற்பது என்னும் வினா இன்று முக்கியமானதாக ஆகியுள்ளது.


ஆகவே நுாறாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று, செய்தியிதழ்களின் முக்கியத்துவம் பல மடங்கு கூடியுள்ளது. இன்று செய்தியை அளிக்க ஏராளமான ஊடகங்கள் உள்ளன. பொறுப்பான, நம்பகமான செய்தியை அளிப்பதற்குத்தான் செய்தியிதழ்கள் தேவையாகின்றன. ஒரு நிறுவனத்தின் செய்தியை நாம் ஏற்கலாம், மறுக்கலாம்.


ஆனால், அந்நிறுவனம் அச்செய்திக்குப் பொறுப்பேற்கிறது. எவரும் பொறுப்பேற்காத செய்தி செய்தியே அல்ல, வதந்தி என நாம் இன்று புரிந்துகொள்ள வேண்டும். இச்சூழலில், தினமலர் போன்ற செய்தி இதழ்களின் பங்களிப்பு, மிக முக்கியமானதாக ஆகிறது. தினமலர் தன் செய்திகள் வழியாக, இன்னும் நுாறாண்டுக்கு ஆற்றலுடன் செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்

இப்படிக்கு,
ஜெயமோகன்எழுத்தாளர்

Advertisement