பழைய எதிரிகளாலும் முடியாது; புதிய எதிரிகளாலும் முடியாது: யாரைச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

67


சென்னை: ''பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: வரும் செப்டம்பர் 17ம் தேதி கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது. நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லா கட்சி பணி தான். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்கிறோம்.



பழைய எதிரிகள் - புதிய எதிரிகள்

பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று சூளுரைக்கும் திருநாள், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் முப்பெரும் விழா திருநாள் ஆகும்.




புள்ளிவிவரங்கள்




பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நிலை, மருத்துவத்துறையில் மக்களின் நலன் காக்கு சிறந்த கட்டமைப்பு, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலம், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு நிலைக்கும் வழிவகுக்கும் மாநிலம் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தமிழகத்தின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அளவுக்குத் திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

அண்மையில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் நம் மாநிலத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தனர். உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாக திமுக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும்.


கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம். திமுகவின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement