கடல் கண்காணிப்புக்கு மேலும் 6 பி-8ஐ ரக ரோந்து விமானங்கள்; இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்

7


புதுடில்லி: நீண்டதூர கடல் கண்காணிப்பு விமானங்களான பி-8ஐ ரோந்து விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதனால், இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவுடன் மீண்டும் சுமூகமான உறவை ஏற்படுத்தி, வர்த்தகத்தில் ஈடுபட அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நீண்டதூர கடல் கண்காணிப்புக்கு 6 பி-8ஐ ரோந்து விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் பி-8ஐ-ஐ தயாரிக்கும் போயிங் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அடங்கியஅமெரிக்க பிரதிநிதிகள் குழு, வரும் செப்., 16 முதல் 19 வரை டில்லிக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இந்திய கடற்படையின் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு தாக்குதல் திறனை வலுப்படுத்தும்.

தற்போது இந்திய கடற்படையின் வசம் 12 பி-8ஐ விமானங்கள் உள்ளன. இதில் முதல் 8 விமானங்கள் 2009ம் ஆண்டிலும், அடுத்த 4 விமானங்கள் 2016 ஆண்டிலும் சேர்க்கப்பட்டன. கடற்படை தரப்பில் 10 கூடுதல் விமானங்கள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக, நவம்பர் 2019ல் 6 விமானங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டது. 2021ம் ஆண்டு விமான விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

சமீப காலங்களில், இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படையின் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கடற்படை அதனை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்த சூழலில் இந்தியக் கடற்படைக்கு 6 பி-8ஐ விமானங்கள் வரவிருப்பது, நம் படையினரின் கண்காணிப்பு திறனை மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

Advertisement