ஏஐ வீடியோ மூலம் பிரதமர் குறித்து அவதூறு; காங்கிரஸ் மீது வழக்குப்பதிவு

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து ஏஐ வீடியோ மூலம் அவதூறு பரப்பியதாக பீஹார் காங்கிரஸ் ஐடி பிரிவினர் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை கேலி செய்யும் விதமாக, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை பீஹார் காங்கிரஸ் பகிர்ந்திருந்தது. 36 வினாடி கொண்ட இந்த வீடியோ, பிரதமர் மோடியின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று பாஜ குற்றம்சாட்டியது.
ஆனால், இந்த வீடியோவில் யாருக்கும் அவமரியாதை இல்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், வட அவென்யூ போலீஸ் ஸ்டேஷனில் பாஜ டில்லி தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சங்கேத் குப்தா, காங்கிரஸ் கட்சியின் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், பிரதமர் மோடி மற்றும் அவரது தாயின் கண்ணியத்தை புண்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
அதன்பேரில், பெண்களின் கண்ணியத்தை சீர்குலைத்ததாகக் கூறி, 18(2), 336(3), 336(4), 340(2), 352, 356(2) மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்பும் பீஹாரில் நடத்தப்பட்டு வரும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான யாத்திரையின் போது, பிரதமர் மோடி மற்றும் அவரது இறந்த தாயை குறிவைத்து காங்கிரஸ் கட்சியினர் அவதூறு பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.





