கண்டெய்னர் மோதி மரம் முறிந்தது கோரிமேடு சாலையில் 'டிராபிக்ஜாம்'

புதுச்சேரி : புதுச்சேரி - கோரிமேடு சாலையில், கண்டெய்னர் லாரி மோதியதில் மரக்கிளை முறிந்து விழுந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

கோரிமேட்டில் இருந்து நேற்று இரவு 7:45 மணிக்கு கே.ஏ.02-ஏ.ஜி-0501 பதிவெண் கொண்ட கண்டெய்னர் மினிலாரி ராஜிவ் சதுக்கத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. தட்டாஞ்சாவடி கஸ்துாரிபாய் நகர் அருகே வந்தபோது, மினிலாரியில் இருந்த கண்டெய்னர் சாலையோரத்தில் இருந்த மரத்தின் கிளையில் மோதியது. அதில் மரக்கிளை முறிந்து, கண்டெய்னர் மீது விழுந்தது.

இதனால், மினிலாரியை அங்கிருந்து நகர்த்த முடியாததால் புதுச்சேரி மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து சென்ற, அவ்வழியே வந்த வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டனர். இதனால், திண்டிவனம் மார்க்க சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கண்டெய்னர் மீது விழுந்த மரத்தை அடியோடு வெட்டி அகற்றியதை தொடர்ந்து இரவு 8:45 மணிக்கு போக்குவரத்து சீரானது.

Advertisement