தென்னிந்தியாவின் மாபெரும் மேடை - இரண்டாம்நாள்

1

‛இந்தியா டுடே கன்க்லேவ் சவுத் 2025' மாநாட்டின் முதல் நாள் உறுதிப்பாட்டைப் பிரதிபலித்தது. இரண்டாம் நாள் தனிநபர்கள், தொழில்கள், அரசியல் ஆகியவை புதிய எல்லைகளை எட்டுவதற்கான அபிலாஷைகளைக் குறித்ததாக இருந்தது.கருத்தரங்கின் காலை நிகழ்ச்சிகள், ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது விண்வெளிப் பயணியான ஜானவிடங் கேட்டியுடன் தொடங்கியது. அவர் 2029ல் டைட்டன் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் துணை சுற்றுப்பாதை விண்வெளிப் பயணத்திற்குத் தயாராகிவருகிறார். ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா ஆகியோரின் தாக்கத்தால், போலந்தில் தனிமைப்படுத்தப்பட்ட பயணங்கள் முதல் ஐஸ்லாந்தில் செவ்வாய்கிரகத்தில் இருப்பது போன்ற நிலப்பரப்பில் பயிற்சி எடுத்தல் ஆகியவை உள்ளிட்ட தனது பயணத்தை "அனலாக் விண்வெளி வீரரின் பயணம்" என்று அவர் வர்ணித்தார். அவரது விடாமுயற்சியும் கண்டுபிடிப்புகளும் கனவு காணும் இளைஞர்களுக்கு வானமும் எல்லையல்ல என்ற தெளிவான செய்தியை அளித்தது.

கருத்தரங்கின் கவனம் விண்வெளியிலிருந்து சுகாதாரத்துறைக்கு மாறியது. தொழில்நுட்பம் இந்திய மருத்துவத்தை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதற்கான உதாரணங்களை மணிப்பால் எண்டர்பிரைசஸின் தலைவர் டாக்டர் எச். சுதர்சன் பல்லாள் வழங்கினார். ஆப்பிள் வாட்ச் எவ்வாறு ஒரு உயிரைக் காப்பாற்றியது என்பது முதல், ரோபோக்கள் தொலைதூர அறுவை சிகிச்சைகளை எவ்வாறு செய்கின்றன என்பது வரை அவர் விளக்கினார். அவரது அமர்வு, தென்னிந்தியாவின் சுகாதார மாதிரியில் கருணையும் புதுமையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை அழுத்தமாக எடுத்துக்காட்டியது. கருத்தரங்கில் சஞ்சய் தத்தின் உரை ரியல் எஸ்டேட் துறை பற்றிப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தியாவின் அலுவலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்களை அவர் எடுத்துரைத்தார். 2025ல் இந்திய நிறுவனங்கள், அலுவலக இடங்களுக்கான மொத்தத் தேவையில் 50% பூர்த்தி செய்துள்ளன. பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்கள் இந்த வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன. இருப்பினும், அதிக நில விலை, பெரிய முதலீட்டுச் செலவுகள், கட்டுப்பாட்டுத் தடைகள் ஆகியவை இந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

சூடு பறந்த அரசியல் விவாதம்



இந்தியா டுடே மாநாட்டின் அடுத்த அமர்வு அரசியலைமையமிட்டதாக அமைந்தது. கே. ராஜு, டாக்டர் அன்புமணி ராமதாஸ், ராகேஷ் சின்ஹா ஆகியோர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிய அனல் பறக்கும் விவாதத்தை நிகழ்த்தினார்கள். நூறாண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளே இன்னமும் மக்கள் நலத்திட்டக் கொள்கைகளை வடிவமைக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய இந்த விவாதம் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு வரை விரிவடைந்தது. கணக்கெடுப்பை ஆதரிப்பவர்கள் சாதிக் கணக்கெடுப்பைச் சமூகநீதிக்கான கருவியாகப் பார்த்தனர். எதிர்ப்பாளர்களோ இதை அரசியல்மயமாக்குவது குறித்து எச்சரித்தனர்.
Latest Tamil News
தெலுங்கானாவின் சமூக - பொருளாதார கணக்கெடுப்பு நாடு தழுவிய அணுகுமுறைக்கான நல்ல முன்மாதிரியாக முன்வைக்கப்பட்டது. அடுத்ததாக, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனது அரசியல் பயணம், லட்சியங்கள்,பெங்களூருவின் உள்கட்டமைப்பு பிரச்னைகள் பற்றிப் பேசினார். "பிறப்பால் காங்கிரஸ்காரன்" என்று தன்னை அறிவித்துக் கொண்ட அவர், 2029ல் ராகுல் பிரதமராக வருவார் என்று கணித்ததுடன், ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான பெங்களூரு மறு சீரமைப்புத் திட்டத்தையும் வெளியிட்டார். அரசியல்கணிப்பும் நடைமுறைத் திட்டமிடலும் கலந்ததாக அவரது அமர்வு அமைந்தது.

காணொலி மூலம் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், 2030ல் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான தனது தொலைநோக்குப் பார்வையை வெளியிட்டார். "திராவிட மாதிரி 2.0" -ல் ஊன்றிய அவரது திட்டம், மாநிலத்தின் தொழில் வலிமையுடன் கல்வி, திறன் மேம்பாடு, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றை வலியுறுத்தியது.
Latest Tamil News
"மத்திய அரசின் தடைகள் தமிழகத்தின் வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்தலாம்; ஆனால் அதை நிறுத்த முடியாது," என்பதே அவரது செய்தி. ஆட்சி முறை சார்ந்து பேசிய டாக்டர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்), குடிமக்களுக்கான சேவைகளுக்கு ஏ.ஐ.யையும் "தூயதரவுத்தள”ங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துப் பேசினார். நலத்திட்டங்களால் பயனடையும் குடும்பங்களைக் கண்காணிப்பது முதல் கோயம்புத்தூரில் 3 மில்லியன் சதுரஅடி கொண்ட ஏ.ஐ. ஐடி பூங்கா அமைப்பது வரை அவரது பார்வை தொழில்நுட்பத்தை நாளைய ஆட்சியின் மையத்தில் நிறுத்தியது.

தெலுங்கானா அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு, வணிகம் குறித்துப் பேசினார். மத்திய அரசு குறைக் கடத்தி முதலீடுகளில் தனது மாநிலத்தைப் புறக்கணிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். தெலுங்கானாவின் பெருகிவரும் கடன் குறித்துப் பேசிய அவர், 200 ஏக்கர் பரப்பளவில் ஏ.ஐ. சிட்டி, யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கான திட்டங்களையும் அறிவித்தார். தொழில்நுட்பத்திலும் தொழில்முனைவிலும் மாநிலத்தை முன்னணி இடத்தில் நிலைநிறுத்துவதே அவரது பார்வை.

தமிழகத்தின் 2026 தேர்தல் அரசியல் விவாதத்தின்மையமாக இருந்தது. இதில் கடந்தகால வாக்கு சதவீதங்கள், மத்திய-மாநில மோதல்கள், "திராவிட மாதிரி" ஆகியவை ஆராயப்பட்டன. பாஜக, திமுக ஆட்சியைத் தாக்கியது. காங்கிரஸ் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பாராட்டியது. வாக்குத் திருட்டு, வாரிசு அரசியல்,மத்திய- மாநில ஆட்சி குறித்த எதிரும் புதிருமான கருத்துகள் பார்வையாளர்களை ஈர்த்தன.

அடுத்து, கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஐக்கிய ஜனநாயக முன்னணி-இடதுசாரி ஜனநாயக முன்னணி மோதலை அலசினார். கடந்த முறை பா.ஜ.,வின் 4% வாக்குகள் சிபிஎம்.,முக்கு மாறியதே காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் என்று அவர் கூறினார். மேலும், சசி தரூரின் தனிப்பட்ட போக்குகள் குறித்து வெளிப்படையான கருத்துக்களையும் தெரிவித்தார். அவரது கருத்துக்கள், தேசியக் கூட்டணிகளுக்கும் மாநில அளவிலான போட்டியாளர்களுக்கும் இடையே மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய சுழலில் காங்கிரஸ் இருப்பதை வெளிப்படுத்தியது.

அடுத்து கருத்தங்கின் கவனம் திரையுலகை நோக்கித் திரும்பியது. ஸ்வேதா மேனன் கேரளத் திரையுலகின் அம்மா (AMMA) அமைப்பின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். தன்னை "504 குழந்தைகளின் சட்ட பூர்வமான அம்மா" என்று அறிவித்துக்கொண்ட அவர், ஹேமா கமிட்டி அறிக்கை, பாலினச் சமத்துவம், மலையாள சினிமாவின் பரிணாமம் ஆகியவை குறித்துப் பேசினார். அவரது அமர்வு கலாச்சார சீர்திருத்தம், தனிப்பட்ட மறு சீரமைப்பு ஆகியவை பற்றியதாக இருந்தது.

மாநாட்டின் இரண்டாம் நாள் கோயம்புத்தூர் பற்றிய இதமான, உணர்வு பூர்வமான விவாதத்துடன் நிறைவடைந்தது. அனைவரையும் அரவணைக்கும் கோவையின் பண்பு, உள்ளடக்கம், தொழில்முனைவு உணர்வு மற்றும் இயற்கை அழகுக்காக நகரம் கொண்டாடப்பட்டது. பங்கேற்பாளர்கள் அதன் காலநிலை, உணவு, சமூக உணர்வைப் புகழ்ந்தாலும், இளைஞர்களைத் தக்கவைத்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கலாச்சார மையங்களை வளர்ப்பது என்று கோவையின் சவால்களையும் சுட்டிக்காட்டினர். தனக்கே உரிய விழுமியங்களை இழக்காமல் வளர்ச்சியை முன்னெடுப்பதே கோவையின் லட்சியம் என்பது தெளிவாகத் தெரிந்தது.

தென்னிந்தியா இந்தியாவின் பொருளாதார, அரசியல் ஆய்வுக்கூடம் என்பதைக் காட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதைக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் சுட்டிக்காட்டியது. விண்வெளிப் பயணிகள் முதல் முதல்வர்கள் வரை, தொழில்முனைவோர்கள் முதல் நடிகர்கள் வரை பல்வேறு தரப்பினரும் தென்னகத்தின் தனித்தன்மையை வெளிப்படுத்தினார்கள். வளர்ச்சியை நாடும் அதே வேளையில், தன்னுடைய அடையாளத்தில் வேரூன்றிய தன்மையும் வெளிப்பட்டது. இந்தியாவின் எதிர்காலத்தின் இதயத்தில் தென்னிந்தியா தவிக்க முடியாத சக்தி என்பதை இந்தியா டுடேவின் இரு நாள் கருத்தரங்கம் உறுதிப்படுத்தியது.

Advertisement