எத்தனாலால் ஆதாயமா? அமைச்சர் கட்கரி மறுப்பு

மும்பை:பெட்ரோலில், 20 சதவீதம் எத்தனால் கலப்பு முயற்சியால், தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிராகரித்துள்ளார்.

மத்திய அரசு காற்று மாசுபாட்டை குறைக்கவும், எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகளை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

அரசு, எத்தனாலை ஒரு துாய்மையான மற்றும் மலிவான மாற்று எரிபொருளாக ஊக்குவிக்கும் அதேவேளையில், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, வாகன பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் தேர்வு ஆகியவற்றில் அதன் தாக்கம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அரசின் கொள்கைகளால் தனிப்பட்ட முறையில் அமைச்சர் கட்கரி ஆதாயம் அடைந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், முன்னணி எத்தனால் நிறுவனங்களில் கட்கரியின் மகன்கள் பங்குதாரர்களாக இருப்பதேயாகும். இக்குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ள கட்கரி, இது அரசியல் உள்நோக்கம் கொண்ட சமூக ஊடக பிரசாரம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

எனக்கு எவ்வித பணப்பற்றாக்குறையும் இல்லை. எனக்கு ஒரு சர்க்கரை ஆலை, ஒரு சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் உள்ளது. நான் தனிப்பட்ட லாபத்திற்காக விவசாயத்தில் பரிசோதனை மேற்கொள்ளவில்லை. நான் பணத்துக்காக இதை செய்கிறேன் என நினைக்கிறீர்களா?

நேர்மையாக எப்படி சம்பாதிப்பது என்பது எனக்கு தெரியும். நான் ஒன்றும் புரோக்கர் இல்லை. என் மூளையின் மதிப்பு மாதத்துக்கு, 200 கோடி ரூபாய்.

மக்காச்சோளம் மற்றும் கரும்பில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்வதால், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதுடன், அவர்களின் வருமானமும் அதிகரிக்கிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை இது குறைக்க உதவுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதே இத்திட்டத்தி ன் மு க்கிய நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement