ஏ.டி.எம்.,மில் நுாதன திருட்டு; பெங்களூரு ஐ.டி., ஊழியர் கைது

தாம்பரம்; ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க வருவோரிடம், நுாதன திருட்டில் ஈடுபட்ட ஐ.டி., ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பழைய பெருங்களத்துார், மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 58; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 30ம் தேதி, தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில், தனது எஸ்.பி.ஐ., கார்டை பயன்படுத்தி, 1,000 ரூபாய் எடுக்க முயன்றார். அப்போது, கார்டு ஏ.டி.எம்., இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது.

அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர், தமிழ்செல்விக்கு உதவுவது போல நடித்து, 'பாஸ்வேர்டு' பெற்றுக்கொண்டு, ஏ.டி.எம்., கார்டு எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, தமிழ்செல்வி வீட்டிற்கு வந்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து 80,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக, குறுந்தகவல் வந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்த தமிழ்செல்வி, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் திம்மராயப்பா, 40, என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், திம்மராயப்பாவை கைது செய்தனர்.

விசாரணையில், ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்க வரும் முதியோரை குறிவைத்து ஏ.டி.எம்., கார்டை வாங்கி, அதில் பசையை தடவி மிஷினில் ஒட்ட வைத்து விடுவார்.

அவர்களிடம் வேறு கார்டை கொடுத்தனுப்பிவிட்டு, பின் அந்த கார்டை பயன்படுத்தி நுாதன முறையில் திருடி வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து, 15,000 ரூபாய், ஒரு மொபைல் போன், 52 போலி ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement