வேளச்சேரி அம்மா மண்டபம் ஒருநாள் வாடகை ரூ.1.70 லட்சம்

சென்னை; தமிழகத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், சென்னையில் நான்கு இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. அவற்றை, தனியார் வாயிலாக பராமரிக்க, வாரியம் முடிவு செய்தது. இருப்பினும், இதற்கான ஒப்பந்ததாரர் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது.

அதனால், வேளச்சேரி, நேரு நகர், காமராஜர் தெரு பகுதியில், 8.70 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபம், பயன்பாட்டுக்கு வராமல் முடங்கியது. இதற்கு ஒப்பந்ததாரர் கிடைக்காததால், வாரியமே நேரடியாக பராமரிக்கும் பணிகளை துவக்கியுள்ளது.

இதன்படி, இந்த மண்டபத்தை பயன்படுத்த, ஒரு நாள் வாடகை, 1.70 லட்சம் ரூபாய் என்றும், அரை நாள் வாடகை, 85,000 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை தனியாக செலுத்த வேண்டும்.

குளிர்சாதன வசதியுடன், 650 இருக்கைகள் கொண்டதாக, இந்த மண்டபம் வாடகைக்கு வழங்கப்படும். மண்டபத்தை வாடகைக்கு பெற விரும்புவோர், அடையார் முத்துலட்சுமி சாலையில் உள்ள வீட்டுவசதி வாரியத்தின், பெசன்ட் நகர் கோட்ட அலுவலகத்தை அணுகலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement