வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து: அசாமில் அரசு அதிகாரி கைது

12


கவுகாத்தி: அசாமில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த பெண் அரசு அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


அசாமின் கோலாகட் மாவட்டத்தை சேர்ந்தவர் நுபுர் போரா. 1989 ல் பிறந்த இவர், கவுகாத்தி பல்கலையில் ஆங்கில இலக்கியம் பட்டம் பெற்றவர். துவக்கத்தில் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். பிறகு அசாம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 2019 ல் அரசு அதிகாரியாக தேர்வானார். முதலில், கர்பி அங்லோங் என்ற இடத்தில் துணை கமிஷனராக பணியை துவக்கினார்.


கடந்த ஆறு ஆண்டுகளாக பணியில் இருக்கும் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து மற்றும் பணம் சேர்த்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரை கடந்த 6 மாதங்களாக கண்காணித்து வந்ததாக முதல்வர் ஹிமாந்தா பிஸ்வ சர்மா கூறியிருந்தார்.


இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள், நுபுர் போரா வீட்டில் சோதனை நடத்தினர். அதில் அவரது வீட்டில் இருந்து ரூ.1 கோடி மதிப்பு தங்கம் மற்றும் ரூ.92 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரது உதவியாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

Advertisement